டெல்லி :பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா(86) கடந்த அக்டோபர் 9ஆம் தேதியன்று காலமானார். அவரது உடலுக்கு அக்டோபர் 10-ஆம் தேதியன்று முழு அரசு மரியாதை செலுத்தபட்டது. இந்நிலையில், அவர் பிரிந்து ஒரு மாதங்கள் கடந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கட்டுரை வடிவில் தொழிலதிபர் ரத்தன் டாடாவை பற்றி நினைவூட்டியுள்ளார்.
அதில், "ரத்தன் டாடா நம்மை விட்டு பிரிந்து ஒரு மாதமாகிவிட்டது. பெரிய நகரங்கள் முதல் கிராமங்கள் வரை சமுதாயத்தில் ரத்தன் டாடா இல்லாதது பெரும் வருதத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர்கள், வளர்ந்து வரும் தொழில்முனைவோர் மற்றும் கடின உழைப்பாளிகள் அவரது இழப்பிற்கு இன்று வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரத்தன் டாடா மறைவு இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் மிக வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இளைஞர்களுக்கு ரத்தன் டாடா ஒரு உத்வேகமாக இருந்தார். அவரது தலைமையின் கீழ் செயல்பட்ட டாடா குழுமம் உலகளவில், நேர்மை மற்றும் நன்பகத்தன்மை கொண்ட புதிய உயரங்களைத் தொட்டது. சமீபத்திய ஆண்டுகளில், அவர் இந்தியாவின் ஸ்டார்ட் ஆப் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு வழிகாட்டியாக அறியப்பட்டார். இளம் தொழில் முனைவோரின் நம்பிக்கைகளையும், அவர்களிடம் இருக்கும் திறமையையும் அறிந்துகொண்டார்.
உலகளாவிய அளவுகோல்களை அமைக்க, இந்திய நிறுவனங்களை வலியுறுத்தினார். இவரது தொலைநோக்குப் பார்வை, நமது வருங்காலத் தலைவர்களை உலகத் தரத்திற்கு ஒத்ததாக மாற்றுவதற்கு ஊக்கமளிக்கும்.
அவரது கருணை அனைத்து உயிர்களிடத்திலும் பரவியது. விலங்குகள் மீதான அவரது ஆழ்ந்த அன்பு மற்றும் விலங்குகள் நலனில் தனிக்கவனம் செலுத்தும் ஒவ்வொரு முயற்சியையும் ஆதரித்தார். மேலும், தனது நாய்களின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார்.
உண்மையான தலைமை என்பது ஒருவரின் சாதனைகளால் மட்டுமல்ல, மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைக் கவனித்துக் கொள்ளும் திறனால் அளவிடப்படுகிறது என்பதை அவரது வாழ்க்கை நமக்கு நினைவூட்டுவதாக இருக்கிறது.
நெருக்கடி காலங்களில் ரத்தன் டாடாவின் தேசபக்தி பிரகாசமாக பிரகாசித்தது. பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலை அவர் விரைவாக திறந்தது; தேசத்திற்கு ஒரு ஊக்கமாக இருந்தது. பல ஆண்டுகளாக அவரை மிக நெருக்கமாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நாங்கள் குஜராத்தில் நெருக்கமாகப் பணிபுரிந்தோம். அங்கு அவர் அதிகளவில் முதலீடு செய்தார். பல திட்டங்களில் மிகவும் ஆர்வமாக இருந்தார்.