டெல்லி: முன்னாள் இந்தியப் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் மறைந்த வேளாண் விஞ்ஞானி முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருதை, பிரதமர் மோடி அறிவித்து இருந்தார்.
மேலும், இது தொடர்பாக தனது X வலைத்தளப் பக்கத்தில் பாரத ரத்னா விருதாளர்கள் குறித்து மோடி பதிவிட்டு உள்ளார். அதில்,
முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்:நாட்டின் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்-க்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது நம்முடைய அரசின் அதிர்ஷ்டம். நாட்டிற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பிற்காக இந்த மரியாதை அர்ப்பணிக்கப்படுகிறது. அவர் தனது முழு வாழ்க்கையையும் விவசாயிகளின் உரிமைகள் மற்றும் நலனுக்காக அர்ப்பணித்தவர்.
உத்தரப் பிரதேச முதலமைச்சராக இருந்தாலும் சரி, உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி, அவர் தேசத்தைக் கட்டி எழுப்புவதற்கு எப்போதும் உத்வேகம் அளித்தவர். எமர்ஜென்சிக்கு எதிராகவும் அவர் உறுதியாக நின்றார். நமது விவசாய சகோதர சகோதரிகளுக்கு அவர் காட்டிய அர்ப்பணிப்பும், நெருக்கடி நிலையின்போது ஜனநாயகத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது.
முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ்:நமது முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ்-க்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்பதை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு சிறந்த அறிஞராகவும், அரசியல்வாதியாகவும், நரசிம்ம ராவ் பல்வேறு பதவிகளில் இந்தியாவுக்காக செயலாற்றினார். ஆந்திரப் பிரதேச முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும், பல ஆண்டுகளாக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் ஆற்றிய பணிகளுக்காக நினைவுகூரப்படுபவர்.