டெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்கு பின் இன்று (ஜூலை.1) மீண்டும் இரு அவைகளிலும் அமர்வு தொடங்கியது. குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெறுகிறது.
முன்னதாக புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக வழிநடத்துவதாக கூறி எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சசி தரூர், கே.சி. வேணுகோபால், மணீஷ் திவாரி, கே.சுரேஷ், வர்ஷா கெய்க்வாட், ஆம் ஆத்மி எம்பிக்கள் சஞ்செய் சிங், ராகவ் சத்தா, திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் சகரிகா கோஷ், சிவ சேனா உத்தவ் அணியை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
எதிர்க்கட்சிகளுக்கு மரியாதை, மிரட்டல் விடுப்பதை நிறுத்தவும், எதிர்க்கட்சிகளை அமைதியாக்க விசாரணை அமைப்புகளை தவறாக வழிநடத்துவதை தவிர்க்கவும் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷம் எழுப்பினர். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்களை விசாரணை அமைப்புகள் மூலம் கைது செய்து மத்திய அரசு எதிர்க்கடிசிகளை நசுக்க நினைப்பதாக குற்றம்சாட்டினர்.
ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சட்டவிரோத நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு 149 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் கடந்த ஜூன் 29ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். மறுபுறம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்வெழுதாத மாணவர்களுக்கு புதிய தரவரிசை பட்டியலில் மதிப்பெண்கள் என்ன? - NEET Re Examination Result