ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா இன்று பதவியேற்றுள்ளார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக்கப்பட்ட பிறகு, தேர்வு செய்யப்பட்ட முதல் முதலமைச்சர் என்ற பெருமையும் உமர் அப்துல்லாவுக்கு கிடைத்துள்ளது. மேலும், அப்துல்லாவுடன் இணைந்து அமைச்சர்கள் ஐந்து பேர் பதவியேற்றுள்ளனர். இவர்களுக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
காஷ்மீரில் கடந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 42 இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வென்றது. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், 48 எம்எல்ஏக்களுடன் தேசிய மாநாட்டுக் கட்சி ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைத்துள்ளது.
இன்று ஜம்முவின் ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடந்த பதவியேற்பு விழாவில், இந்தியா கூட்டணி தலைவர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய விஐபி-க்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக பதவியேற்று புதிய சரித்திரம் படைத்துள்ள உமர் அப்துல்லாவின் அமைச்சரவை, அனுபவசாலிகளையும், அரசியலில் வளர்ந்து வருபவர்களையும் உள்ளடக்கி, கலவையான குழுவாக உள்ளது. சுரீந்தர் குமார் சௌத்ரி, சகீனா மசூத் போன்ற அரசியல் பிரமுகர்கள் முதல் சதீஷ் சர்மா போன்ற சுயேச்சை வேட்பாளர்களை வரை இந்த அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், தேசிய மாநாட்டுக் கட்சியில் அங்கம் வகித்துள்ள காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க மறுத்துள்ளது.
உமர் அப்துல்லாவின் அமைச்சரவை
உமர் அப்துல்லா: ஜம்மு காஷ்மீர் முதல்வர்
அரசியல் குடும்பத்தில் பிறந்த உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் துணை தலைவராக இருந்து வருகிறார். இவர் ஜம்மு காஷ்மீர் அந்தஸ்து நீக்கப்படுவதற்கு முன்பாக, 2009 முதல் 2015 வரை 11வது முதலமைச்சராக பணியாற்றியுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் எர் ரஷீத்திடம் தோல்வி அடைந்தார். பின்னர் கடந்த மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில், புட்காம் மற்றும் கந்தர்பால் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட அப்துல்லா, முறையே 18,485 மற்றும் 10,574 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சுரிந்தர் குமார் சவுத்ரி:துணை முதல்வர்
உமர் அப்துல்லாவின் மினி-கேபினட்டில் இணைந்துள்ள சுரிந்தர் குமார் சௌத்ரி, ஜம்மு காஷ்மீர் அரசியலில் "ஜெயண்ட் கில்லர்" என்றே அறியப்படுகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இவர் பாஜகவின் ரவீந்தர் ரெய்னாவை 7,819 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மிக பெரிய அளவில் பேசப்பட்டார். கடந்த 1995 இல் தேசிய மாநாட்டில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய சுரிந்தர் குமார் சவுத்ரி, சில காலம் பாஜக மற்றும் பி.டி.பி கட்சிகளில் இணைந்து பின்னர் மீண்டும் தேசிய மாநாட்டில் இணைந்தார். தற்போது அமைச்சரான இவருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
சகீனா மசூத்: அமைச்சர்
உமர் அப்துல்லாவின் அமைச்சரவையில் இணைந்துள்ள ஒரே பெண் உறுப்பினர் சகீனா மசூத் ஆவார். நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் டிஎச் போரா தொகுதியில் போட்டியிட்ட இவர் பிடிபி கட்சியின் வேட்பாளர் குல்சார் அகமது டாரை 17,449 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அமோக வெற்றி பெற்றார். இவர் 1994 இல் தனது தந்தை வாலி முகமது படுகொலை செய்யப்பட்ட பிறகு அரசியலுக்கு நுழைந்தார். இவர் கடந்த காலங்களில் எம்எல்ஏ, அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து அரசியலில் நல்ல அனுபவத்தை கொண்டவர்.