டெல்லி:எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கடந்த மே மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வில் குளறுபடி நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆள் மாறாட்டம், குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் அதிகம் பேர் நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்றது, ஒரே தேர்வு மையத்தில் ஒன்றாக தேர்வெழுதிய மாணவர்கள் முழு மதிப்பெண் எடுத்தது, தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
குறிப்பாக பீகார், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார் சர்ச்சையானது. மேலும் நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததும், அரியானாவில் ஒரே தோ்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 போ் முதலிடம் பிடித்தது உள்ளிட்ட சம்பவங்கள் சர்ச்சையைக் கிளப்பின.
இதனையடுத்து நீட் தோ்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில மையங்களில் வழங்கப்பட்ட வினாத்தாள் முற்றிலும் மாறுபட்டு, மிகவும் கடினமாக இருந்ததாக மாவட்ட ஆட்சியரிடம் தேர்வு எழுதிய மாணவர்கள் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.