வயநாடு: கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு குழந்தைகள், பெண்கள் உட்பட 291 உயிர்களை காவு வாங்கியுள்ளது. இன்னும் 240 பேர் காணாத சூழலில் பலி எண்ணிக்கையும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
பிள்ளைகளை இழந்த பெற்றோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள், துணையை இழந்த உறவுகள் என இரவோடு இரவாக நடந்த பேரிடரின் தாக்கத்தில் இருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்களை சோக இருள் சூழ்ந்துள்ளது. இந்த மிக துயரமான நேரத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் இரு குழந்தைகளுக்கு பெண் ஒருவர் தாய்ப்பால் கொடுத்து பசியாற்றிய நிகழ்வு கலங்க வைக்கிறது.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் தாய், தந்தை இரண்டு பேரையும் இழந்த சிறு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. அதை கேள்விப்பட்ட இடுக்கியை சேர்ந்த பெண் ஒருவர் அக்குழந்தைகள் மேல் இரக்கப்பட்டுள்ளார். மேலும், அந்த பெண்ணுக்கு 4 வயது மற்றும் நான்கு மாத கை குழந்தையும் உள்ளது. இந்நிலையில், தாய் பால் மறக்காத குழந்தைகள் இரண்டும் தங்களது தாய் தந்தையை இழந்திருப்பதை அறிந்த அவர் அக்குழந்தைகளுக்கு தாய் பால் கொடுத்து வருகிறார்.
தற்போது இடுக்கியில் உள்ள தங்களது வீட்டில் இருந்து குடும்பத்துடன் வயநாடுக்கு சென்றுள்ள அந்த பெண் இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், நானும் இரண்டு சிறு குழந்தைகளுக்குத் தாய். தாய் இல்லாத குழந்தைகளின் நிலை எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். அதுதான் என்னை இந்த முடிவை எடுக்கத் தூண்டியது. இதுபற்றி தனது கணவருடன் கலந்தாலோசித்தபோது, அவர் அதற்கு உறுதுணையாக இருந்தார். பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளைப் பற்றிய செய்தியைக் கேட்டதும், அக்குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்று தனது கணவர் கூறியதால் இந்த முடிவு எடுத்ததாக' அந்த பெண் கூறினார்.
இதையும் படிங்க:வயநாடு நிலச்சரிவு; ஒரே நேரத்தில் தமிழ்நாடு - கேரள அரசுகள் அறிக்கை அளிக்க உத்தரவு!