வயநாடு:கேரளாவின் வயநாட்டில் உள்ள மேப்பாடி, சூரல் மலை மற்றும் முண்டகையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் 5வது நாளாக நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350ஆக அதிகரித்துள்ளது. மேலும், 200க்கும் மேற்பட்டோர் தற்போதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முண்டகையில் நேற்று வரை நடத்தி ரேடார் சோதனையில், உயிர் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் கிடைக்கவில்லை எனத் தேசிய மீட்புப் படை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, ரேடார் சிக்னல் கிடைத்த பகுதியில் நேற்று இரவு சுமார் 5 மணி நேரமாக நடத்தப்பட்ட தேடுதலில் பூமிக்கு அடியில் உயிரோடு இருப்பவர்கள் யாரும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தற்போதுவரை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 146 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. 76 சடலங்கள் வரை அடையாளம் தெரியாததால், இன்று பொது மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. அதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.