டெல்லி:நாடே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்த நாடாளுமன்றத் தேர்தல் இன்று (மார்ச் 16) மாலை 3 மணியளவில் அறிவிக்கப்பட்டது. அதே போல் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 4 மாநில சட்டசபைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்தியத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன?வெளிப்படையான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் இந்த விதிகளை வகுத்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து முடிவுகளை அறிவிக்கும் வரை நாள்வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்.
இதனை அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் வரை அனைவரும் பின்பற்றுவது முக்கியம். அவ்வாறு செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட வேட்பாளர் அல்லது கட்சி மீது தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
விதிமுறைகள் கூறுவது என்ன:
- பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள் யாராயினும் முறையான ஆவணங்கள் இன்றி ரொக்கமாகப் பணம், நகைகள் ஆகியவற்றை எடுத்துச் செல்லக் கூடாது. சோதனையின் போது அப்படி ஏதேனும் சிக்கினால் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும்.
- எந்த ஒரு அரசியல் கட்சியும் சாதி அல்லது மத அடிப்படையில் வாக்காளர்களிடம் வாக்குகளைக் கோரக்கூடாது. அதே போல் தேர்தல் சமயத்தில் தவறான தகவல்களைப் பரப்பக்கூடாது.
- வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது, வாக்குச் சாவடிக்குச் செல்ல வாகன வசதி செய்து தருவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
- தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் ஆளும் கட்சியினர் எந்தவிதமான அரசு அறிவிப்புகள், பதவியேற்பு, அடிக்கல் நாட்டல், போன்ற எந்த நிகழ்ச்சிகளையும் செய்யக் கூடாது என விதிமுறைகள் குறிப்பிடுகின்றன.
- அரசினுடைய இல்லங்கள், விடுதிகள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்டவற்றை ஆளும் கட்சி வேட்பாளர்கள் பயன்படுத்தக் கூடாது. அவற்றைப் பிரச்சார அலுவலகங்களாக பயன்படுத்துவதற்கோ அல்லது பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தேர்தல் நேரத்தில் செய்தித்தாள்கள் உள்ளிட்ட பிற ஊடகங்களில் அரசின் பணத்தில், அரசியல் செய்திகள் மற்றும் சாதனைகள் தொடர்பான விளம்பரங்கள் வெளியிடக்கூடாது.
- நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் எதையும் செய்ய முடியாது.
- அரசுப் பணியாளர்கள், பணியிடை மாற்றம், பதவி உயர்வு போன்றவற்றைச் செய்யக்கூடாது.
- தனிப்பட்ட முறையில் ஒருவரைத் தாக்கக் கூடாது. மற்ற கட்சி வேட்பாளர்கள் பற்றி அவதூறான செய்திகளைப் பரப்பக் கூடாது.
- மத வெறுப்புகளைத் தூண்டும்படி தேர்தல் பரப்புரையின் போது பேசக் கூடாது. அதேபோல் ஒருவரை இழிவுபடுத்தும் வகையில் பேசக் கூடாது. என்று விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை? எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!