டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 9வது கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இந்தியா கூட்டணி கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த நிலையில், ஒரேயொரு எதிர்க்கட்சித் தலைவராக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மட்டும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தை பாதியிலேயே புறக்கணித்து வெளியேறினார். மேற்கு வங்க மாநிலத்திற்கு நிதி கோரிய போது தன்னை பேச அனுமதிக்கவில்லை என்றும் 5 நிமிடங்கள் கூட்ட தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
நிதி குறித்து பேசிய போது தனது மைக் ஆப் செய்யப்பட்டதாகவும், பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய பாஜக அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடையே தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இருந்து கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரே நபர் தான் என்றும் ஆனால் தன்னை பேச அனுமதிக்கவில்லை, இது பெரும் அவமானம் என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.
மேலும், நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க மாநிலத்திற்கு நடத்தப்படும் அரசியல் பாகுபாட்டிற்கு எதிர்து போராட உள்ளதாகவும், பட்ஜெட்டில், மேற்கு வங்கம் மற்றும் மற்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டிய விதத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்ற நிலையில், இந்த கூட்டத்தை புறக்கணிக்கப்பதாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான், இமாச்சல பிரதேசம் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
இதனிடையே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக துணை முதலமைச்சர்காள் விஜய் குமார் சின்ஹா மற்றும் சாம்ராட் சவுத்ரி ஆகியோர் பங்கேற்றனர். நிதிஷ் குமார் பங்கேற்க்காததற்கு எந்த காரணம் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரம் மற்றொரு பாஜக கூட்டணியான புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பா? - Bihar CM Nitish Skip NITI Aayog