லக்னோ : விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பாஜக 195 வேட்பாளர்கள் பெயர்கள் அடங்கிய தனது முதல் கட்ட பட்டியலை நேற்று (மார்ச்.2) வெளியிட்டது. டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் வைத்து தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே வெளியிட்டார்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 51 இடங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார். அதேநேரம் கடந்த முறை எம்பி தேர்தலில் போட்டியிட்ட சிலரது பெயர்கள் இந்த முறை அறிவிக்கப்படாதது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேனகா காந்தி, அவரது மகன் வருண் காந்தி, மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷன் சிங், சங்கமித்ர மவுரியா, ஜெனரல் வி.கே சிங் ஆகியோரின் பெயர்கள் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறாதது அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார்களா இல்லையா என்ற பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளன.
8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக மேனகா காந்தி, சுல்தான்பூர் தொகுதியில் சிட்டிங் எம்.பியாக உள்ளார். அதேபோல் அவரது மகனும் 3 முறை எம்.பியுமான வருண் காந்தி கடந்த முறை பிலிபித் தொகுதியில் வெற்றி பெற்றார். அதேபோல் கைசர்கஞ்ச் தொகுதியில் வென்ற பிரிஜ் பூஷன் சிங், மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மவுரியாவின் மகள் சங்கமித்ர மவுரியா, காசியாபாத் தொகுதியில் வென்ற ஜெனரல் வி.கே சிங் ஆகியோரின் பெயர்கள் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை.