புவனேஷ்வர்: கடந்த 2006 ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கு வந்த ஜெர்மன் சேர்ந்த சுற்றுலா பெண் பயணி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஒடிசாவின் முன்னாள் காவல்துறை இயக்குநர் ஜெனரல் பித்யா பூஷன் மொஹந்தியின் மகன் பிதிஹோத்ரா மொஹந்தி (41) என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு ராஜஸ்தான் நீதிமன்றத்தில் நடந்த வந்த நிலையில் இவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி மொஹந்தி அதே ஆண்டில் தனது நோய்வாய்ப்பட்ட தாயை பார்க்க பரோல் கிடைத்து வெளியே வந்தார். அப்போது அவர் தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ராஜஸ்தான் காவல்துறை மொஹந்தியை சல்லடை போட்டு தேடி வந்தனர். ஆனால், அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் 7 ஆண்டுகள் கழித்து 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மொஹந்தி கேரளாவில் இருப்பது தெரிய வந்தது.
அங்கு சென்ற போலீசார் மொஹந்தி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அங்கு அவர் ராகவ் ரஞ்சன் என்ற பெயரில் போலி அடையாளத்துடன் அங்குள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வருவதும் தெரிந்தது. தொடர்ந்து அவரை பிடித்து கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அவருக்கு 2.5 லட்சம் ரூபாய் உத்தரவாத தொகை பெற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும், ஜாமீன் காலத்தில் கட்டாக்கில் உள்ள கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் மாதந்தோறும் ஆஜராக வேண்டும் எனவும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
இதனை அடுத்து வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மொஹந்தி புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க:செமினார் ஹாலில் பெண் மருத்துவருக்கு நடந்த கொடூரம்.. கொலைக்கு பின் தூங்கிய அரக்கன்.. கொல்கத்தாவை உலுக்கிய வழக்கு!