தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிரா ரயில் விபத்து.. உயிரிழப்பு எண்ணிக்கை 13-ஆக உயர்வு! - JALGAON TRAIN ACCIDENT

மகாராஷ்டிராவின் ஜல்கான் அருகே ரயிலில் தீ பற்றுவதாக அஞ்சிய பயணிகள், அபாய சங்கிலியை இழுத்து கீழே இறங்கியபோது, மற்றொரு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா ரயில் விபத்து பகுதி
மகாராஷ்டிரா ரயில் விபத்து பகுதி (PTI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2025, 9:55 AM IST

ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் அருகே நேற்று (ஜன.22) ரயிலில் தீப் பற்றுவதாகக் கருதிய பயணிகள் சிலர், அபாய சங்கிலியை இழுத்து கீழே இறங்கியபோது, அவர்கள் மீது மற்றொரு ரயில் மோதிய கோர விபத்தில், உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் இருந்து மும்பை நோக்கி பயணிகளுடன் வந்து கொண்டிருந்த புஷ்பாக் விரைவு ரயிலில், நேற்று மாலை பொதுப்பெட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட பரவிய தகவலால், அங்கிருந்த சில பயணிகள் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திவிட்டு, கீழே இறங்கியுள்ளனர்.

13 பேர் உயிரிழப்பு:

அந்த நேரத்தில், அருகே இருந்த தண்டவாளத்தில் வேகமாக வந்த பெங்களூரு - டெல்லி இடையே செல்லும் கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மீது மோதியுள்ளது. அதில், சம்பவ இடத்திலேயே 12 பயணிகள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து, காயமடைந்த நபர்கள் அருகே இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையில், பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மும்பையில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், "முதற்கட்ட தகவலின் படி, ரயிலில் ஒரு பெட்டியில் ஜாமிங்கில் (jamming) உருவான அதிக சூடு காரணமாக தீப்பொறிகள் கிளம்பியுள்ளது. அதனைக் கண்ட பயணிகள் பயத்தில், அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து கீழே குதித்துள்ளனர். அந்த நேரத்தில் தண்டவாளத்தைக் கடந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மீது மோதியுள்ளது" என தெரிவித்துள்ளார்.

மேலும், "பயணிகள் திடீரென தண்டவாளத்திற்கு நடுவே வந்ததாகவும், அப்போது கர்நாடக ரயில் பைலட் தெரிவுநிலைப் பாதிக்கப்பட்டதால், ரயில் பயணிகள் மீது மோதியதாகவும், அப்பகுதியில் மணிக்கு 100 கி.லோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டதால் குறைக்க முடியவில்லை எனவும், இருப்பினும் விபத்தைத் தவிர்க்க இரண்டு ரயில் பைலட்டுகளும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ததாகவும்" ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி ஆறுதல்:

இதுகுறித்து பிரதமர் மோடி அவரது எக்ஸ் பக்கத்தில், "ஜல்கானில் ஏற்பட்ட ரயில் விபத்து மிகவும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்த நபர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர்" எனப் பதிவிட்டுள்ளார்.

நிவாரணம் அறிவிப்பு:

இந்த நிலையில், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணமும், பலத்த காயமடைந்த நபர்களுக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்த நபர்களுக்கு ரூ.5 ஆயிரமும் நிவாரணமாக வழங்க ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:பாம் சரவணனுக்கு சிகிச்சை அளிக்கக்கோரிய மனு.. மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

மேலும், விபத்தில் உயிரிழந்தவரகள் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவீஸ், "உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் எனவும் அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அரசியல் தலைவர்கள் இரங்கல்:

அதுமட்டுமின்றி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல அரசியல் தலைவர் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலையும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details