டெல்லி: 2024 மக்களவைத் தேர்தல் திருவிழா மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த நிலையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 20) நடைபெறுகிறது. இதன்படி, பீகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஆறு மாநிலங்கள், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அது மட்டுமல்லாமல், ஒடிசாவின் 35 சட்டமன்றத் தொகுதிகளின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது. இதற்கான சூறாவளி பிரசாரம் நேற்றைய முன்தினம் மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி மே 3 அன்று முடிவடைந்தது. இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவின் 13 மக்களவைத் தொகுதிகளில் 512 பேர் போட்டியிடுகின்றனர். அதனைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேசத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் 466 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மக்களவைத் தொகுதிகள்: பீகாரில் சீதாமார்ஜி, மதுபானி, முசார்பூர், சரன் மற்றும் ஹஜிபூர் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல், ஜார்கண்டில் சத்ரா, கொடார்னா, ஹஜாரிபாக் ஆகிய தொகுதிகளிலும், ஒடிசாவில் பார்கார்ஹ், சுந்தர்கார்ஹ், பொலாங்கீர், கந்தாமல் மற்றும் அஸ்கா ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மேலும், மகாராஷ்டிராவில் துலே, திந்தோரி, நாசிக், பால்கர், பிவண்டி, கல்யாண், தானே, மும்பை வடக்கு, மும்பை வடக்கு - மேற்கு, மும்பை வடக்கு - கிழக்கு, மும்பை வடக்கு - மத்தி, மும்பை தெற்கு மத்தி மற்றும் மும்பை தெற்கு ஆகிய தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.