டெல்லி:மூத்த வழக்கறிஞரும், சட்ட வல்லுநருமான ஃபாலி எஸ் நாரிமன்(95) டெல்லியில் இன்று (பிப்.21) காலமானார். இந்தியாவின் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலான இவர், இதய நோய் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் 17, 2014 அன்று, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவிற்காக இவர் ஆஜராகி, அவருக்கு ஜாமீன் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் வழக்கு உட்பட பல முக்கிய வழக்குகளில் வாதிட்டுள்ளார்.
ஃபாலி எஸ் நாரிமன், மியான்மர் நாட்டில் 1929, ஜனவரி 10ஆம் தேதி, பார்சி குடும்பத்தில் பிறந்தார். 1950-ல் தனது வழக்கறிஞர் பணிக்கான பயிற்சியை மும்பை உயர்நீதிமன்றத்தில் மேற்கொண்டார், இவர். 1971-ல் நாரிமன் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 1975, ஜூன் மாதம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் எமர்ஜென்சி (Emergency Act) கொண்டு வந்தபோது எதிர்ப்புத் தெரிவித்து தனது அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தார். அதோடு, அப்போது இவர் மும்பையில் இருந்து டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, பின்னர், நாரிமன் 1999-2005 வரை ராஜ்ய சபாவில் நியமன உறுப்பினராக பதவி வகித்தார்.
உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான இவர் 1991-ல் பத்ம பூஷன், 2007-ல் பத்ம விபூஷன் விருதுகளைப் பெற்றுள்ளார். இந்திய பார் கவுன்சிலின் பொறுப்பாளராக இருந்த இவர், 'Before Memory Fades' என்ற சுயசரிதை உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார். இவர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரோஹிண்டன் எஃப் நாரிமனின் தந்தையாவார்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட X பதிவில், 'புகழ்பெற்ற அரசியலமைப்பு சட்ட நிபுணரும், இந்தியாவின் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான #FaliNariman காலமானார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமடைகிறேன் . ஏழு தசாப்தங்களாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய அவரது அனுபவம் வரலாற்றுச் சிறப்புமிக்கது மற்றும் குறிப்பிடத்தக்கது.