திருவனந்தபுரம்: மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில், மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (ஜூன்.12) ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்தால் உயிரிழந்தவர்களில் 40 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கேரளாவை சேர்ந்த 19 பேர் தீ விபத்தில் இறந்ததாக கூறப்பட்டுள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து மாநில அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும், மாநில அரசு சார்பாக சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், குவைத் செல்ல உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் குவைத் சென்று விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், இறந்தவர்களின் உடல்களை கொண்டு வருவதற்கும் தேவையான முயற்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரபல லூலூ குழுமத் தலைவர் எம்ஏ யூசுப் அலி மற்றும் ரவி பிள்ளை அகியோரும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 லட்ச ரூபாய் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு 2 லட்ச ரூபாயும் வழங்குவது குறித்து முதலமைச்சர் பினராயி விஜயனிடம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஏறத்தாழ 12 லட்ச ரூபாய் வரை நிவாரணம் பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் அதிகளவில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தே தீ விபத்துக்கான காரணமாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக குவைத் போலீசார் தெரிவித்துள்ளனர்.
எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களால் ஏற்பட்ட கரும் புகை காரணமாக பொது மக்கள் குடியிருப்பை விட்டு வெளியே வரமுடியாமல் போனதாகவும், அடுக்குமாடியின் மேல் பரப்புக்கு செல்ல முயன்ற போது அங்கிருந்த கதவுகள் மூடப்பட்டு இருந்ததாலும் அதிகளவில் மக்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளமர். அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து சம்பவம் தொடர்பாக கட்டடத்தின் உரிமையாளர் மற்றும் எகிப்து நாட்டை சேர்ந்த காவலாளி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 5 தமிழர்கள் பலி- அமைச்சர் செஞ்சி மஸ்தான்! - Kuwait building fire 5 tamils dead