டெல்லி : இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத்தை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் இளம் வேட்பாளர் விக்ரமாதித்யா சிங் களமிறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2024 மக்களவை தேர்தல் நாடு முழுவது 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜூன் 1ஆம் தேதி 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இமாச்சல பிரதேசத்தில் ஹமிர்பூர், கங்கரா, மண்டி, ஷிம்லா என மொத்தம் 4 தொகுதிகள் உள்ளன.
இதில் மண்டி தொகுதியில் திரைப்பட நடிகை கங்கனா ரனாவத்தை பாஜக களமிறக்கி உள்ளது. அதேநேரம் காங்கிரஸ் தரப்பில் வலுவான தலைவர் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மண்டி தொகுதியில் இமாச்சல பிரதேச முன்னாள் முதலமைச்சர் விரபத்ர சிங்கின் மகனும் மாநில கேபினட் அமைச்சருமான விக்ரமாதித்ய சிங் களமிறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பேசியா மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங், மண்டி தொகுதியில் இளம் வேட்பாளருக்கு வாய்ப்பு அளிக்க கட்சித் தலைமை விரும்புவதாக தெரிவித்தார். மேலும், இரண்டு பேர் இறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களில் யார் வேட்பாளர் என்பதை கட்சித் தலைமையும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் விரைவில் அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு, 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் மண்டி தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், ஆலோசனைக் கூட்டத்தில் இமாச்சல பிரதேசம் குறித்து மட்டுமே முழுவதுமாக பேசப்பட்டதாகவும், இரண்டு தொகுதிகளுக்கு வேட்பாளர் இறுதி செய்யப்பட்ட நிலையில், மற்ற இரண்டு தொகுதிகளுக்கு பரிசீலனையில் உள்ளதாக கூறினார்.
அண்மையில், காங்கிரஸ் அரசின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக விக்ரமாதித்யா சிங் தனது ராஜினாமா முதலமைச்சர் சுக்விந்த சுக்குவிடம் வழங்கினார். இதனால் மாநிலத்தில் ஆட்சி கவிழும் சூழல் காணப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் உயர் மட்ட குழு உறுப்பினர்கள் பூபேந்தர் சிங் ஹூடா, பூபேஷ் பாகெல், டி.கே. சிவக்குமார் தலைமையில் சிம்லாவில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து விக்ரமாதித்ய சிங் தனது முடிவில் இருந்து பின்வாங்கி ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :"மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு"- ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி! - Lok Sabha Election 2024