டெல்லி :டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் மெகா பேரணியில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இந்த பேரணியில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜனநாயகத்தை காக்கும் (லோக்தந்த்ரா பச்சாவ்) போராட்டம் என்ற தலைப்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் மெகா பேரணியில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் உரை நிகழ்த்த உள்ளார்.
ஏப்ரல் 19ஆம் தேதி முதல் மக்களவை தேர்தல் தொடங்க உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டணியை சீர்குழைக்கும் வகையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது அமைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்தியா கூட்டணியின் இந்த பிரம்மாண்ட பேரணி மத்திய அரசுக்கு அழுத்தம் திருத்தமான செய்தியை கொண்டு போய் சேர்க்கும் என நம்புவதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.
முன்னதாக இந்த பேரணி குறித்து பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர், இந்தியா கூட்டணி சார்பில் நடத்தப்படும் பிரம்மாண்ட பேரணியில் சுனிதா கெஜ்ரிவால் கலந்து கொண்டு அரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரான முழக்கத்தை எழுப்ப உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
பஞ்சாப் முதலமைச்சர் பக்வத் மான், ஒவ்வொரு தொதியில் இருந்தும் ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் வரை டெல்லியில் நடைபெறும் மெகா பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்து உள்ளார். சிறு சிறு குழுக்களாக கிடைக்கும் வாகனங்களில் புறப்பட்டு டெல்லியை வந்து சேருமாறு பக்வத் மான் தெரிவித்து உள்ளார்.
அதேநேரம் பாஜக ஆளும் அரியானாவில் இருந்து டெல்லி செல்லக் கூடிய எல்லைகள் மூடப்பட்டு ஆம் ஆத்மி தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. மெகா பேரணியில் மகாராஷ்டிரா சிவ சேனா உத்தவ் அணியின் தலைவர் உத்தவ் தாக்ரே, ஆர்ஜெடி தலைவர் மற்றும் முன்னாள் துணை பீகார் முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், ஜார்கண்டி முதலமைச்சர் சம்பை சோரன், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, பிடிபி தலைவர் மெகபூபா முக்தி, திமுக தரப்பில் திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :உபியில் கட்டுமான பணியில் இருந்த பாலம் இடிந்து விபத்து - என்ன காரணம்? - Uttar Pradesh Bridge Collapse