சில்மா: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஜெய்ராம் தாகூர் உள்ளிட்ட பாஜகவைச் சேர்ந்த 15 சட்டமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து அம்மாநில சட்டப்பேரவை தலைவர் இன்று (பிப்.28) உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல, அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான விக்ரமாதித்ய சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் காங்கிரஸ் தலைவர் வீரபத்ர சிங்கின் மகன் ஆவார்.
ஹிமாச்சல் பிரதேசத்தில் ஒரு மாநிலங்களவை இடத்துக்கான தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில், மொத்தம் உள்ள 68 எம்எல்ஏக்களில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்எல்ஏக்கள் உள்ளபோதும், 25 பாஜக எம் எல் ஏக்களுடன் இணைந்து கொண்ட காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 6 பேரும் வாக்களித்தனர். அதேபோல, 3 சுயேட்சை எம்எல்ஏக்களும் வாக்களித்துள்ளனர். இதனால், பாஜகவின் வேட்பாளர் ஹர்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றுள்ளார்.
இதனால், ஹிமாச்சல் பிரதேசத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, பாஜக தலைவர் ஜெய்ராம் தாகூர் தலைமையிலான எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை தலைவரை சந்தித்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா, ஹிமாச்சல் பிரதேச ஆளுநர் சிவ பிரதாப் சுக்லா ஆகியோரிடையே சிம்லாவில் உள்ள ராஜ்பவனில் சந்தித்துப் பேசினர். இதைத்தொடர்ந்து விக்ரமாதித்யா சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ விபின் சிங் பர்மர், 'எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் குரல்வளையை முடக்கக்கூடாது எனவும் இது தொடர்பாக சபாநாயகரிடம் பேச சென்றபோது தாங்கள் தாக்குதலுக்கு ஆளானதாகவும்' அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய விக்ரமாதித்ய சிங், இந்த சூழ்நிலையில் அரசின் அங்கமாக நான் நீடிப்பது சரியாக இருக்காது. ஆகவே, எனது அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்ய உள்ளேன். எனது ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரிடமும் இதற்காக மேற்கொண்ட ஆலோசனையில் இந்த முடிவு செய்யப்படும். நிலவும் அரசியல் நிலை குறித்து கட்சியின் மேலிடத்திற்கு நான் விளக்கியுள்ளேன். மேற்படி, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கட்சி நல்ல முடிவை எடுக்கும் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், காங்கிரஸ் அரசு அம்மாநிலத்தில் பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், இதனை உறுதிப்படுத்த வேண்டுமென்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் தாகூர் உள்ளிட்ட பாஜக எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என வலிறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க:"எலான் மஸ்க்குக்கே கிடைக்காத வாய்ப்பு" உலக விண்வெளி மையமாக மாறப்போகும் தமிழ்நாடு!