உத்தரபிரதேசம்: உத்தரபிரேதசத்தில் மீண்டும் ஒரு மசூதி மற்றும் கோயில் சர்ச்சை எழுந்துள்ளது. முன்னதாக கோயில் இடிக்கப்பட்டு உத்தரபிரதேசத்தில் பல்வேறு மசூதிகள் கட்டப்பட்டுள்ளதாக இந்து மத ஆதரவாளர்கள் சிலர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்த நிலையில், இந்திய தொல்லியல் துறை இது குறித்து ஆய்வு செய்து விரைந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனடிப்படையில், இந்தியத் தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட மசூதிகளில் ஆய்வில் இறங்கியது. இதன் ஒரு பகுதியாக 839 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை தொல்லியல் துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், 17ஆம் நூற்றாண்டில் ஞானவாபி மசூதி கட்டப்படுவதற்கு முன்பாக அந்த இடத்தில் இந்துக் கோயிலிருந்ததை உறுதிப்படுத்தி அறிக்கையைச் சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில், ஞானவாபி மசூதியின் சுவர்களில் இந்து மதக் கடவுள்களின் சிற்பங்களும் வரைபடங்களும், முன்னதாக இங்குக் கோயிலிருந்ததை உறுதிப்படுத்துகின்றது. 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படும் ஞானவாபி மசூதியில் மேற்கு சுவர் 5000 ஆண்டுகள் பழமையானது. மேலும், அது இந்து கோயிலுக்குச் சொந்தமானது.
கன்னடம், தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளைக் கொண்ட கல்வெட்டுகள் மசூதியினுள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், முகலாயப் பேரரசரான ஔரங்கசிப் நிறுவிய ஷிலாலேக் என்னும் கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்காக மசூதியின் பல்வேறு இடங்கள் தற்போது வரை உபயோகத்திற்குத் தடை விதிக்கப்பட்டு சீல் செய்யப்பட்டது.
மேலும், 17ஆம் நூற்றாண்டு கால கட்டமைப்பைக் கட்டுவதற்காக ஒரு கோவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஒரு அறைக்குள் கிடைக்கப்பெற்ற அரபு-பாரசீக கல்வெட்டு ஔரங்கசிப்பின் 20வது ஆட்சியாண்டில் மசூதி கட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இது மட்டுமின்றி மசூதியினுள் மத வழிபாடுகளை உறுதிப்படுத்தும் வகையில், சிற்பங்கள் மற்றும் பல்வேறு அறைகளும் கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மத ஆதரவாளர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மத்தியிலிருந்து இரு தரப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இரு தரப்பு மனுக்களை விரிவாக ஆய்வு செய்து விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் இந்த அறிக்கை நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதையடுத்து உத்தரபிரதேசத்தில் மதக்கலவரங்கள் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் அதிகளவில் கணிக்கப்பட்டிருந்த நிலையில், போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆய்விற்காக மசூதியில் பல்வேறு இடங்கள் சீல் வைக்கப்பட்டு உபயோகத்திற்குத் தடை செய்யப்பட்டிருந்த நிலையிலும், தடை செய்யப்படாத குறிப்பிட்ட சில இடங்களில் இஸ்லாமியர்கள் மசூதியில் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், வெள்ளிக் கிழமை வழிபாட்டின் போது இரு தரப்பினரிடையே நிலவிவரும் பதற்ற சூழலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:பாரத் நியாய யாத்திரை: அசாமில் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு!