டெல்லி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாட்கள் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு துறைகளைச் சார்ந்த அமைச்சர்களைச் சந்தித்து வரும் ஆளுநர் ரவி, தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், ''தமிழகத்தில் நிலவி வரும் சட்ட ஒழுங்கு, அதன் தாக்கங்கள் மற்றும் தமிழக மக்களின் பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமிஷ் ஷாவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது என்றும் இந்த சந்திப்பு பயனுள்ளதாக இருந்ததாகவும்'' கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த சந்திப்பு குறித்து ஆளுநர் ரவி, ''அமைச்சர் அமித் ஷா மக்களை பாதிக்கும் விஷயங்களில் அற்புதமான நுண்ணறிவு கொண்டவர் என்றும், மக்களுடைய நல்வாழ்வில் அக்கறை உள்ளவர் என்றும் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் ரவி, அங்கு முகாமிட்டு பல்வேறு துறை அமைச்சர்களைச் சந்தித்து வருகிறார். முன்னதாக, இன்று (ஜூலை 17) பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரையும் ஆர்.என்.ரவி சந்தித்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுடனான சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் உயர்கல்வியை முன்னேற்றிக் கொண்டு செல்வதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து விவாதித்ததாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை அடுத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் ஆளுநரைச் சந்தித்து சட்ட ஒழுங்கு தொடர்பாக கோரிக்கைகளை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "பணவீக்கம், வேலையின்மை.. மக்களுக்கு வேறென்ன வைத்திருக்கிறீர்கள்"- ராகுல் காந்தி கேள்வி