டெல்லி:பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக இந்தியாவில் குடியேறும் இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையின மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை பெறுவதற்கான விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 14 பேருக்கு இந்திய குடியுரிமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை பெற்றவ 14 பேரிடம் அதற்கான சான்றிதழ்களை டெல்லியில் வைத்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மை மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்தச் சட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது.
இந்தச் சட்டத்தின்படி, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 தேதிக்குள் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். அவர்களிடம் எவ்வித ஆவணங்களும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.