பெங்களூரு:கர்நாடக காங்கிரஸ் கமிட்டி சட்டப் பிரிவின் சார்பில், பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்று கொடுக்கப்பட்டது.
அந்த புகாரில், 'காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் குறித்து வங்கதேச பத்திரிகையாளர் சலா உதின் சோயிப் சவுத்ரி என்பவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், சோனியா காந்தியின் திருமணம், இந்திய குடியுரிமை மற்றும் அவரது மத சுதந்திரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, அவரை ஐஎஸ்ஐ முகவராகவும் சித்தரித்துள்ளார்.
அதேபோல, காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி மற்றும் அவரது வெளிநாட்டு நண்பர்கள் மீது பாலியல் குற்றசாட்டுகளை வைத்துள்ளார்.
ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு முன்னதாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில், ஆதாரமின்றி பொய்யான தகவலை பதிவிட்டுள்ள வங்கதேச பத்திரிகையாளர் மீதும், அதனை பகிர்ந்து வைரலாக்கிய அதிதி கோஷ் என்பவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் மேற்கண்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தாய் மடியில் இருந்த குழந்தையை கவ்விக் கொன்ற ஓநாய்கள்... தூக்கமின்றி தவிக்கும் கிராமங்கள்!