அயோத்தி: உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில், இன்று குழந்தை வடிவிலான ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அதேபோன்று, அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள், சாதுக்கள், குருக்கள் ஆகியோரும் இந்த பிரான் பிரதிஷ்டா நிகழ்வில் கலந்து கொள்ள வந்துள்ளனர்.
இதற்காக, அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டது. எங்கு பார்த்தாலும் பூ தோரணங்கள், நகரில் உள்ள அனைத்து கோயில்களிலும் மிளிர்ந்த வண்ணமிகு விளக்குகள் என ஜொலித்தது. மேலும், மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படும் அயோத்தி ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டா நிகழ்வையொட்டி, பலகட்ட பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அயோத்தியில் திரைப்பிரபலங்கள்:இந்த நிலையில், நேற்று முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரைப்பிரபலங்கள் அயோத்தி நோக்கி படையெடுத்தனர். அந்த வகையில், நேற்று சென்னையில் இருந்து புறப்பட்ட தமிழ் சினிமா நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோர், மாலை லக்னோ விமான நிலையத்துக்கு வந்தடைந்தனர். இவர்களில், ரஜினிகாந்துக்கு அவர் தங்கிய ஓட்டலில் இருந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதே போன்று, ராம் சரண், மாதுரி தீக்ஷித், ஆயுஷ்மான் குரானா ஆகியோர் அயோத்தி விழாவில் பங்கேற்றனர். மேலும், விக்கி கவுசல் - கத்ரினா கைஃப் தம்பதியும் மும்பையில் இருந்து புறப்பட்டுச் சென்று, இன்று காலை நடைபெற்ற ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டா நிகழ்வில் பங்கேற்றனர்.
அதேபோல், அனுபம் கெர் அயோத்தி விழாவில் பங்கேற்றார். மேலும், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், கங்கனா ரனாவத், டைகர் ஷெராஃப் மற்றும் ஆஷா போஷல் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் அயோத்தி ராமரை தரிசித்துள்ளனர். மேலும், ராஜ்குமார் ஹிரானி, மஹாவீர் ஜெயின் மற்றும் ரோகித் ஷெட்டி உள்ளிட்ட இயக்குநர்களும் சென்றுள்ளனர். மேலும், சச்சின் டெண்டுல்கர், அணில் கும்ளே, மிதாலி ராஜ், சாய்னா நெய்வல் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
இது மட்டுமல்லாது, மோகன்லால், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, சஞ்சய் லீலா பன்சாலி, அக்ஷய் குமார், தனுஷ், ரன்தீப் ஹூடா, அனுஷ்கா ஷர்மா, ரிஷப் செட்டி, மாதுர் பந்தார்கர், அஜய் தேவ்கான், ஜாக்கி ஷெராஃப், யாஷ், பிரபாஸ் மற்றும் சன்னி தியோல் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். முன்னதாக, இவர்கள் அனைவரும், அயோத்தி ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டா நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சி என தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: 10,000 சிசிடிவி, டிரோன் கேமராக்களுடன் உச்சக்கட்ட பாதுகாப்பு