புதுடெல்லி:அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படும் நடவடிக்கை ஒன்றும் புதிய விஷயமல்ல. நீண்டகாலமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக கூறப்பட்ட இந்தியர்கள் 104 பேர் அங்கிருந்து இந்தியாவுக்கு அண்மையில் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசினார்.
அப்போது அவர், "சட்டவிரோத குடியேற்றத்தில் சிக்கிக்கொள்ளும் நமது குடிமக்கள் பிற குற்றங்களுக்கு இரையாகின்றனர். அவர்கள் மனிதாபிமானமற்ற நிலைமைகளின்கீழ் இடம்பெயர செய்யப்படுதல், கடினமான வேலை செய்தல் ஆகிய இரண்டிலும் சிக்கிக் கொள்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இதுபோன்ற சட்டவிரோத இடம்பெயர்வின்போது உயிரிழப்புகள் கூட ஏற்பட்டுள்ளன," என்று அமைச்சர் பேசினார்.
மேலும் பேசிய அவர் "இதுபோன்ற பிரச்னைகளில் சிக்கி தப்பிப்பிழைத்து நாடு திரும்பியவர்கள் தாங்கள் அனுபவித்த வேதனைகளை சொல்லி நாம் கேட்டுள்ளோம்.சட்டவிரோத குடியேற்றங்கள் கண்டறியப்பட்டால், அவர்களை தாய்நாட்டுக்கு திரும்ப அழைத்துக் கொள்ளும்படி கோருவது அனைத்து நாடுகளின் கடமையாகும்.