H1-B: ஐடி வேலைக்காக அமெரிக்க செல்வது கடினம் - டிரம்ப் வென்றால் இது நடக்கும்? - TRUMP ON H1B 2024
டிரம்ப் வென்றால் வெளிநாட்டவர் வேலைக்காக அமெரிக்க செல்ல வழிவகை செய்யும் எச்1பி (H1-B) விசாவில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என ஜே.எம் நிதி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றால் எச்1பி விசாவிற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. (X / @realDonaldTrump)
டெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தல் 2024-இல் வரும் முடிவு, வேலை சார்ந்த குடியுரிமை விஷயங்களில், குறிப்பாக H-1B விசா விவகாரத்தில், முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தும் என ஜே.எம் நிதி நிறுவனம் (JM Financial) வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
இதில், இன்று (நவம்பர் 5) நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபராக பதவியேற்றால், அவரது முந்தைய ஆட்சியில் அமல்படுத்திய கட்டுப்பாடுகளை மீண்டும் விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது H-1B மற்றும் L-1 விசாக்களுக்கு அதிகமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும், இவற்றின் நிராகரிப்பு விகிதங்கள் அதிகரிக்கக் கூடும் எனவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தபோது, H-1B விசாவின் தொடக்க நிராகரிப்பு விகிதமானது 4 விழுக்காட்டிலிருந்து 17 விழுக்காடாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், L-1 விசா நிராகரிப்பு விகிதமும் 12 விழுக்காட்டில் இருந்து 28 விழுக்காடாக அதிகரித்தது. இதேபோன்ற போக்கு மீண்டும் தொடரலாம் என ஜே.எம் நிதி நிறுவனத்தின் கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஐடி வேலைக்கு பாதிப்பு
குறிப்பாக, தொழில்நுட்ப சேவை வழங்கும் ஐடி நிறுவனங்களுக்கு இது முக்கியமான பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது எனவும் அறிக்கை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கையில், "டிரம்பின் ஆட்சி காலத்தில், E.O.13788 என்ற ‘அமெரிக்க பொருள்களை வாங்குங்கள், அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துங்கள்,’ என்ற நிர்வாக ஆணையால் H-1B விசாக்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியிருந்தார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அதன் பிறகு, பல ஐடி நிறுவனங்கள் H-1B விசாக்களை அதிகமாக சார்ந்து இருக்கவில்லை. சமீப காலமாக, H-1B விசா சார்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை 65% ஆக இருந்தது. தற்போது 50% என்ற அளவிற்கும் குறைவாக உள்ளதாக கணக்கிடப்படுகிறது. இதனால், நிறுவனங்கள் வேலைக்கு ஊழியர்களை தேர்வு செய்வதில் ஏற்படும் ஏற்றம்-இறக்கங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடிகிறது. ஏனெனில், பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே பணியாளர்களை அதிகம் இணைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், டிரம்பின் ஆட்சி காலத்தில் H-1B விசா வைத்திருப்போருக்கான குறைந்தபட்ச சம்பளத் தேவைகளை உயர்த்த முயற்சித்தது. இதனால் சில நிறுவனங்கள் தங்கள் செலவை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இவை நீதிமன்றத்தில் தடுத்து நிறுத்தப்பட்டாலும், டிரம்ப் மீண்டும் அதிபராக வந்தால் இதுபோன்ற நடவடிக்கைகள் உருவாக வாய்ப்புள்ளது என்று அறிக்கை தெரிவிக்கின்றது.
இப்போது, H-1B விசா வைத்திருப்போர் ஊதியத்தை, பொதுவாக உள்ள ஊதிய வரப்புகளை ஒப்பிடும்போது 25 முதல் 35 விழுக்காடு அதிகமாகவே உள்ளன; இதனால் சம்பளக் கட்டுப்பாடு குறித்த குற்றச்சாட்டுகள் சிக்கலானவை ஆகின்றன. எனினும், டிரம்ப் பதவிக்கு வந்தால், இந்திய ஐடி நிறுவனங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் கணிப்புகள் தெரிவிக்கின்றன.