மத்திய பிரதேசம்:அரசு மருத்துவமனை மருத்துவரின் அலட்சியத்தால் சிசேரியன் சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றில் வைத்து தக்கப்பட்ட துணி மூன்று மாதங்களுக்குப் பிறகு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.
அம்லா பகுதியில் வசித்து வரும் காயத்ரி ராவத் என்பவர் கடுமையான வயிற்று வலி காரணமாக பெதுல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, காயத்ரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் துணி இருப்பதை கண்டறிந்த நிலையில், அறுவை சிகிச்சை மூலம் புதன்கிழமை வயிற்றில் இருந்த துணியை அகற்றியுள்ளனர்.
மேலும், பெண்ணின் வயிற்றில் மூன்று மாதங்களாக துணி இருந்ததால், குடல் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், மருத்துவ ஊழியர்களின் அலட்சியப் போக்கை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக பெதுல் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரனையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பெதுலில் உள்ள அரசு மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் காயத்ரி பெண் குழந்தையை பெற்றெடுத்தது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து, காயத்ரி வயிற்றில் இருந்து துணி அகற்றப்பட்டுள்ளது.