தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'இனியும் என் பொறுமையைச் சோதிக்காதே'.. பேரனை எச்சரிக்கும் முன்னாள் பிரதமர் தேவகவுடா! - Deve Gowda to PRAJWAL REVANNA - DEVE GOWDA TO PRAJWAL REVANNA

Deve Gowda to Prajwal revanna: பிரஜ்வல் ரேவண்ணா குறித்த ஆபாச வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதையடுத்து அவர் தலைமறைவாக இருந்து வரும் நிலையில், இன்று அவரது தாத்தாவும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா உடனடியாக இந்தியா திரும்பி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவரை கடுமையாக எச்சரித்துள்ளார்.

தேவகவுடா, பிரஜ்வல் ரேவண்ணா புகைப்படங்கள்
தேவகவுடா, பிரஜ்வல் ரேவண்ணா புகைப்படங்கள் (credits -ETV Bharat Tamil Nadu, ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 10:43 PM IST

பெங்களூரு:கர்நாடக மாநிலம், ஹசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் கடசியின் எம்பியாக பதவி வகித்து வந்தவர் பிரஜ்வல் ரேவண்ணா. அவர் தொடர்புடைய ஆபாச வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில், அவரை இடைநீக்கம் செய்ததோடு, தற்போது மீண்டும் அவரை இந்தியா அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில் பிரஜ்வல் ரேவண்ணா எங்கிருந்தாலும் உடனடியாக இந்தியாவிற்கு திரும்பி வந்து சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என அவரது தாத்தாவும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா தனது எக்ஸ் தளப் பதிவில் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் கடந்த மே 18ஆம் தேதி கோயில் வழிபாட்டிற்காகச் சென்றிருந்தபோது, பிரஜ்வல் ரேவண்ணா குறித்து ஊடகங்களில் நான் பேசினேன். அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர எனக்கு சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது.

இது எனது குடும்பத்தினர், என்னுடன் பணியாற்றுபவர்கள், நண்பர்கள், கட்சித் தொண்டர்கள் என அனைவருக்கும் வலியை ஏற்படுத்தியது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சட்டத்தின் கீழ் அவருக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். எனது மகனும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி, இந்த சம்பவம் நடந்த நாளிலிருந்து இதனையே வலியுறுத்தி வருகிறார்.

கடந்த சில வாரங்களாகவே மக்கள் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனர், அதனை நான் நன்கு அறிவேன், அவர்களை நான் தடுக்க விரும்பவில்லை. அவர்களை நான் விமர்சிக்க விரும்பவில்லை, எல்லா உண்மைகளும் வெளிவரும் வரை அவர்கள் காத்திருந்திருக்க வேண்டும் என்று நான் அவர்களுடன் வாதிட முயற்சிக்க மாட்டேன். பிரஜ்வலின் செயல்பாடுகள் எனக்கு தெரியாது என்று என்னால் மக்களை நம்ப வைக்க முடியாது.

நான் பிரஜ்வலைக் காப்பாற்ற விரும்பவில்லை என்று மக்களை நம்ப வைக்க முடியாது. அவர் எங்கிருக்கிறார் என்றோ அல்லது அவரது வெளிநாட்டுப் பயணம் குறித்தோ எனக்கு தெரியாது என அவர்களை சமாதானம் செய்ய முடியாது. என் மனசாட்சிக்கு உண்மையாக இருக்கிறேன். நான் கடவுளை நம்புகிறேன், அவருக்கு உண்மை தெரியும் என்று எனக்குத் தெரியும்.

கடந்த சில வாரங்களாக தவறாக பரப்பப்படும் அரசியல் சதிகள், மிகைப்படுத்தல்கள் மற்றும் பொய்கள் குறித்து நான் கருத்து தெரிவிக்க துணியவில்லை. அதைச் செய்தவர்கள் கடவுளுக்கு பதில் சொல்லி, அதற்காக ஒரு நாள் அனுபவித்துக்கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உண்மையையும், என் சுமைகளையும் இறைவனின் காலடியில் வைக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “இந்த நேரத்தில் என்னால் ஒன்றை மட்டுமே செய்ய முடியும். பிரஜ்வலை கடுமையாக எச்சரித்து, அவர் எங்கிருந்தாலும் திரும்பி வந்து போலீசில் சரணடையச் சொல்லலாம். அவர் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இது நான் விடுக்கும் முறையீடு அல்ல, நான் விடுக்கும் எச்சரிக்கை.

இந்த எச்சரிக்கைக்கு அவர் செவிசாய்க்கவில்லை என்றால் எனது கோபத்திற்கும், அவரது குடும்பத்தினர் அனைவரின் கோபத்திற்கும் ஆளாக நேரிடும். அவர் மீதான குற்றச்சாட்டுகளை சட்டம் கவனித்துக் கொள்ளும், ஆனால் குடும்பத்தினரின் பேச்சைக் கேட்காமல் இருப்பது, அவர் தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்யும்.

அவருக்கு என் மீது ஏதேனும் மரியாதை இருந்தால், அவர் உடனடியாக திரும்பி வர வேண்டும். அவருக்கு எதிரான விசாரணையில் என்னிடமிருந்தோ அல்லது எனது குடும்பத்தினரிடமிருந்தோ எந்தவித தலையீடும் இருக்காது என்பதை உறுதி செய்வேன். இது சம்பந்தமாக எந்த உணர்வுகளுக்கும் இங்கு இடமில்லை. அவருடைய தவறான செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பது மட்டுமே எண்ணமாக உள்ளது.

மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவது எனக்கு மிகவும் முக்கியமானது. எனது அரசியல் வாழ்வில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் என்னுடன் நின்றார்கள், அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். நான் உயிருடன் இருக்கும் வரை, நான் அவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்” என கூறினார்.

இதையும் படிங்க: ஆபாச வீடியோ விவகாரம்: பிரஜ்வல் ரேவண்ணா ஜேடிஎஸ் கட்சியில் இருந்து நீக்கம் - குமாரசாமி திட்டவட்டம்! - Prajwal Revanna Suspended In JDS

ABOUT THE AUTHOR

...view details