டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்த டெல்லி உயர் நீதிமன்றம், ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவன்யூவில் உள்ள விசாரணை நீதிமன்றம் நேற்று (ஜூன்.20) மாலை தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்ற வழங்கிய ஜாமீனை நிறுத்தி வைத்தது. இதனிடையே வழக்கின் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.
வழக்கு குறித்து வாதாட போதிய கால அவகாசத்தை விசாரணை நீதிமன்றம் வழங்கவில்லை என அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான எஸ்வி ராஜூ, டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். ஜாமீன் வழங்கும் தீர்ப்பை ஒத்திவைத்து கால அவகாசம் கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவையும் விசாரணை நீதிமன்றம் நிராகரித்ததாக அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இதையடுத்து வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், விசாரணை நீதிமன்றத்தின் ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கக் கோரி ஆரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.