டெல்லி :டெல்லி கலால் வரி முறைகேடு வழக்கு தொடர்பாக தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே சந்திரசேகரா ராவின் மகள் மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் (பிஆர்எஸ்) எம்எல்சியுமான கவிதாவை மார்ச் 23ஆம் தேதி வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.
ஐதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் வீட்டில் நேற்று (மார்ச்.15) அமலாக்கத்துறை இணை இயக்குநர் தலைமையில் வருமான வரித்துறை அதிகாரிகள் உள்பட ஏறத்தாழ 10 பேர் கூட்டாக சோதனையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பிஆர்எஸ் எம்எல்சி கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கவிதா ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை மார்ச் 23ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். டெல்லி கலால் வரி முறைகேடு வழக்கில் தெலங்கானா எம்எல்சி கவிதா மீது மார்ச் 13ஆம் தேதி வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் நிவாரணம் கடந்த 13ஆம் தேதியுடன் காலாவதியான நிலையில், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று (மார்ச்.15) சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு டெல்லியில் கலால் வரி கொள்கை வகுத்ததில் தனியார் நிறுவனங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் முறைகேடு நடந்ததாக கூறி டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா அளித்த புகாரில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சத்தியேந்திர ஜெயின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தெலங்கானா எம்எல்சி கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில், இதே வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :டெல்லி மதுபான கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்!