தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அட்டைப் பெட்டிகளுக்கு நடுவே அமர்ந்து பணியை தொடரும் டெல்லி முதல்வர்.. ஆம் ஆத்மி வெளியிட்ட புகைப்படம் - DELHI CM ATISHI

முதலமைச்சர் இல்லத்தில் இருந்து உடமைகளை காலி செய்து வந்த நிலையில் அட்டைப் பெட்டிகளுக்கு நடுவே அமர்ந்து முதல்வர் அதிஷி கோப்புகளில் கையெழுத்திடும் படத்தை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது

அட்டைப் பெட்டிகளுக்கு நடுவே பணியாற்றும் டெல்லி முதல்வர்
அட்டைப் பெட்டிகளுக்கு நடுவே பணியாற்றும் டெல்லி முதல்வர் (image credits-X/@SanjayAzadSln)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 6:02 PM IST

டெல்லி:தலைநகர் டெல்லியில் ஃபிளாக்ஸ்ஸ்டாப் சாலையில் உள்ள ஆறாம் எண் வீட்டில் இருந்து முதல்வர் அதிஷி, வெளியேற்றப்பட்ட நிலையில், தன் உடைமைகளுடன் கூடிய அட்டைப் பெட்டிகளுக்கு நடுவே அமர்ந்து கோப்புகளில் அவர் கையெழுத்திடும் புகைப்படத்தை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.

இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள ஆம் ஆத்மியின் தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் சிங், "டெல்லி மக்களுக்கு பணியாற்றும் கடமையில் இருந்து அதிஷியை தள்ளி வைக்க முடியாது. நவராத்திரி விழா நடைபெற்று வரும் நிலையில் ஒரு பெண் முதல்வரை அவரது உடைமைகளுடன் அவரது வீட்டை விட்டு பாஜக தூக்கி எறிந்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் சிங், "முதலமைச்சரின் வீட்டை பாஜக வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்க முயன்றிருக்கிறது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் முதலைச்சருக்கும் டெல்லி மக்களுக்கும் எதிரான மிகப்பெரிய அவமரியாதை. டெல்லியில் 27 ஆண்டுகளாக பதவியில் இருந்த ஒரு கட்சி வலுக்கட்டாயமாக டெல்லி முதலமைச்சரின் இல்லத்தை அபகரிக்க முயற்சிக்கிறது. டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்‌ஷேனாவின் சார்பில் முதலமைச்சர் பங்களாவில் இருந்து அதிஷியின் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன," என்றார்.

இதையும் படிங்க:உடமைகளை அகற்றிவிட்டு டெல்லி முதலமைச்சர் வீட்டுக்கு சீல்.. நடந்தது என்ன?

தெற்கு டெல்லியில் உள்ள தமது கல்கஜி தொகுதியில் அதிஷி வசித்து வருகிறார். அவர் கடந்த ஆண்டு அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் அவருக்கு மதுரா சாலையில் உள்ள ஏபி-17 பங்களா ஒதுக்கப்பட்டது. முதல்வர் ஆன பின்னர் ஆதிஷி ஃபிளாக்ஸ்டாப் சாலை பங்களாவுக்கு இடம் பெயர்ந்தார்.

இது குறித்து டெல்லி துணை நிலை ஆளுநர் அலுவலகம், டெல்லி முதலமைச்சர் அலுவலகம், பாஜக, ஆம் ஆத்மி ஆகியவற்றுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த பங்களா முதலமைச்சருடைய அதிகாரப்பூர்வ இல்லம் என்று ஆம் ஆத்மி கூறுகிறது. கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்தபோது இந்த பங்களாவில்தான் இருந்தார். அவர் பதவி விலகிய பின்னர் பங்களாவின் சாவியை அதிஷியிடம் பொதுப்பணிதுறை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர் என்று ஆம் ஆத்மி தெரிவிக்கிறது.

இந்த நிலையில் துணை நிலை அளுநர் அலுவலகம் இதனை மறுத்துள்ளது. "ஃபிளாக்ஸ்டாப் சாலை பங்களா முதல்வருடைய அதிகாரப்பூர்வ இல்லம் அல்ல. அந்த பங்களா இன்னும் அதிஷிக்கு ஒதுக்கப்படவில்லை. புதிதாக வசிப்பதற்கான பொருட்களுடன் குடியேற தயார் செய்யப்பட்ட பின்னரே இந்த பங்களா முதலமைச்சருக்கு ஒதுக்கப்படும்," என்றும் துணை நிலை ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் கூறியுள்ளன.

"பங்களாக புதிதாக ஒதுக்கீடு செய்வதற்காக முறையாக ஒதுக்கப்படாத நிலையில், ஆம் ஆத்மியும், கெஜ்ரிவாலும் அதிஷியை பங்களாவில் சட்டவிரோதமாக குடியேற்ற முயற்சிக்கின்றனர்," என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details