சண்டிகர்: விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டம் (MSP) அமல் படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், போராட்டத்தை கைவிடுமாறு மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் இடையேயான நான்காம் கட்ட பேச்சு வார்த்தை நேற்று (பிப்.18) சண்டிகரில் நடைபெற்றது. முன்னதாக, நடைபெற்ற மூன்று கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மத்திய அமைச்சர்களுடனான நான்காம் கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் (Punjab Kisan Mazdoor Sangharsh Committee) பொதுச் செயலாளர் சர்வன் சிங் பாந்தர் (Sarvan Singh Pandher) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "அடுத்த இரண்டு நாட்களுக்கு அரசு தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும்.
இன்று அல்லது நாளை இது குறித்த முடிவுகள் எடுக்கப்படும். மேலும், எங்கள் மற்ற கோரிக்கைகள் குறித்து டெல்லி சென்ற பின்னர் ஆலோசனை மேற்கொள்வதாக அமைச்சர்கள் கூறியுள்ளனர். அரசும், விவசாய சங்கங்களும் இணைந்து இந்த விவகாரத்திற்கு தீர்வுகாண முயற்சி செய்து வருகின்றனர். அதுவரை போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. முடிவுகள் அது பலனளிக்காத பட்சத்தில் பிப்ரவரி 21ஆம் தேதி 'டெல்லி சலோ' போராட்டத்தை தொடர திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.