புவனேஸ்வர்: டானா எனும் அதிதீவிரப்புயல் ஒடிசா-மேற்குவங்க மாநிலங்களுக்கு இடையே கடற்பகுதியை நெருங்கி வருவதால் இரண்டாவது நாளாக ஒடிசாவில் 11 மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
வங்ககடலில் நிலை கொண்டிருக்கும் டானா புயல் அதிதீவிர புயலாக மாறி இருக்கிறது. இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று இரவு அல்லது நாளை காலை ஒடிசாவின் வடக்கு பகுதி-மேற்கு வங்க மாநிலத்தின் கடற்பகுதிக்கு இடையே பூரி-சாகர் தீவுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டானா புயல் நிலவரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புவனேஸ்வர் மண்டல வானிலை மையத்தின் இயக்குநர் மனோரமா மொகந்தி,"சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெயக் கூடும். சந்த்பாலி பகுதியில் 46.2 மிமீ மழை பதிவாகி உள்ளது. பாரதீப்பில் 62.9 மிமீ மழையும் பெய்துள்ளது. டானா புயல் கரையைக் கடக்கும்போது மழையின் தீவிரம் அதிகரிக்கும். டானா புயல் கரையை கடக்கும்போது கேந்திரபாரா மற்றும் பத்ரக் பகுதிகளில் மணிக்கு 100 முதல் 110 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்,"என்றார்.
ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பேசிய பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் பூஜாரி, "புயலின் தாக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய13 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் மக்கள் 6,500 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நிமிடமும் நிலைமையை கண்காணித்து வருகின்றோம். போலீஸ், உள்ளூர் அரசு நிர்வாகத்தின் உதவியுடன் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நவீன மீட்பு வசதிகளுடன் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் உள்ளிட்டோர் தயார் நிலையில் உள்ளனர். கர்ப்பிணிகள், பல்வேறு நோய்கள் காரணமாக அவதிப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவும் தயார் நிலையில் உள்ளது,"என்றார்.
இதனிடையே கேந்திரபாதா புயல் நிவாரண முகாமை துணை முதலமைச்சர் கேவி சிங்தியோ பார்வையிட்டார். புயல் நிலவரத்தை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதால் பொதுமக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Image credits-ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்