ஐதராபாத் :ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஐபிஎல் சூதாட்டம் நடப்பதாக சைபராபாத் காவல் ஆணையரகத்துக்கு தகவல் கிடைத்து உள்ளது.
இது குறித்து தீவிர சோதனையில் ஈடுபட்ட சைபராபாத் போலீசார், 15 புக்கிகள் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட கும்பலை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 33 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 2 கோடியே 7 லட்ச ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டு உள்ள வங்கிக் கணக்கு 75 செல்போன்கள், 88 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 8 லேப்டாப்களை பறிமுதல் செய்தனர்.
மொத்தமாக ஆன்லைன் சூதாட்ட கும்பலிடம் இருந்து 3 கோடியே 29 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக சைபராபாத் போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும், ஆன்லைன் சூதாட்டம் மூலம் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணம் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளதை கண்டறிந்த போலீசார் ஏறத்தாழ 10 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்ட 10 வங்கிக் கணக்குகளை கண்டுபிடித்து உள்ளனர்.
மேலும், இந்த கைது செய்யப்பட்ட சூதாட்ட கும்பலுடன் இணையதளம் மற்றும் செயலி மூலம் தொடர்பில் இருந்த 581 பேரை கண்டுபிடித்து உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். குகட்பள்ளி, விக்ரபாத், ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூரை சேர்ந்த சூதாட்ட தரகர்கள் என கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்னம் உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
பிடிபட்டவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். மேலும், பெரிய அளவிலான பணம் இந்த சூதாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் வேறு யாரெல்லாம் இந்த சூதாட்ட கும்பலுடன் தொடர்பில் இருந்தனர் என்பது குறித்தும் தீவிரமாக விசாரித்து வருவதாக சைபராபாத் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
அண்மையில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஒரு கோடியே 50 லட்ச ரூபாயை கணவர் இழந்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால் மென்பொறியாளரின் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இதையும் படிங்க :2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்! - 2023 UPSC Civil Service Exam Result