தமிழ்நாடு

tamil nadu

"குறைந்த பட்ச ஆதார விலை" - ராகுல் காந்தியின் முதல் தேர்தல் வாக்குறுதி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 4:46 PM IST

Updated : Feb 13, 2024, 9:16 PM IST

INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி குறைந்த பட்ச ஆதார விலை (MSP) சட்டப்பூர்வமாக்கப்படும் என ராகுல் காந்தி தனது முதல் தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளார்.

congress-rahul-gandhi-first-manifesto
"குறைந்த பட்ச ஆதார விலை" - ராகுல் காந்தியின் முதல் தேர்தல் வாக்குறுதி

டெல்லி:டெல்லி மகாத்மா காந்தி இன்ஸ்டியூட்டில் விவசாய சங்கத் தலைவர்களுடன் நேற்று மாலை (பிப்.12) மத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், சம்யுக்தா கிசான் மொர்சா மற்றும் கிசான் மஸ்தூர் மொர்சா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள், விளை பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகளுக்குக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (பிப்.13) 'டெல்லி சலோ' என்ற பெயரில் மாபெரும் போராட்டத்தை டெல்லியில் நடத்த முடிவு செய்தனர்.

இந்த நிலையில் டெல்லி காவல்துறை இன்று (பிப்.13) விவசாயிகளின் 'டெல்லி சலோ' போராட்டத்தைத் தடுக்க பல்வேறு தடைகளை விதித்தனர். இதுமட்டும் அல்லாது, டெல்லியில் ஒரு மாதத்திற்கு பொதுக்கூட்டம் நடத்தவும், மாநகராட்சி பகுதிகளில் டிராக்டர் நுழையவும் தடை விதித்துள்ளது.

மேலும், டெல்லி முழுவதும் அடுத்த ஒரு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மற்றும் டெல்லியின் ஜரோடா எல்லை, சிங்கு எல்லை ஆகிய பகுதிகளில் சாலையில் பேரிகாட் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (பிப்.13) விவசாயிகள் ஷம்பு எல்லையில் போராட்டம் நடத்த முயன்றபோது, அவர்கள் மீது போலீசார், கண்ணீர்ப் புகைக் குண்டு வீசியுள்ளனர்.

மேலும், ஹரியானா மாநிலம் குருக்‌ஷேத்ரா பகுதியில் கான்கிரீட் ஸ்லாப்கள், முள் வேலிகள், பேரிகேட்கள் அமைத்து போலீசார் விவசாயிகள் போராட்டத்தைத் தடுக்க முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி குறைந்த பட்ச ஆதார விலை (MSP) சட்டப்பூர்வமாக்கப்படும் என ராகுல் காந்தி தனது முதல் தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளார். இது குறித்து அவரது 'X' வலைதளத்தில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

"விவசாய சகோதரர்களே, இன்று ஒரு வரலாற்று நாள்! சுவாமிநாதன் ஆணையத்தின்படி பயிர்களுக்கு ஒவ்வொரு விவசாயிக்கும் MSP சட்டப்பூர்வமா உத்தரவாதம் அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை 15 கோடி விவசாயக் குடும்பங்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும். நீதியின் பாதையில் காங்கிரஸின் முதல் உத்தரவாதம் இதுதான்" என்று குறிப்பிட்டு ராகுல் காந்தி தனது முதல் தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளார்.

தலைநகரில் விவசாயிகள் 2-ஆம் கட்ட போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் ராகுல் காந்தியின் இந்த வாக்குறுதி வெளியிடப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்தோனேசியாவில் மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் உயிரிழப்பு.. விளையாடிக் கொண்டிருந்தபோது விபரீதம்!

Last Updated : Feb 13, 2024, 9:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details