விஜயவாடா: ஆந்திராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்றக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, “முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருமலை திருப்பதி கோயில் லட்டுகள் தரமற்ற பொருட்களால் செய்யப்பட்டவை. குறிப்பாக, நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது லட்டு செய்வதற்கு சுத்தமான நெய் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் கோயில் வளாகம் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
இதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) கீழ் செயல்பட்டு வரும் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டில் நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கேட்டபோது அதிர்ச்சியுற்றதாக ஆந்திராவின் ஐடி அமைச்சர் நாரா லோகேஷ் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு மதிப்பு அளிக்கவில்லை எனவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.