டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது. இதனை டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.
ஏற்கனவே, டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையால் மார்ச் 21 அன்று கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை 200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது.
அது மட்டுமல்லாமல், இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த ஜூலை 12ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும், சிபிஐ மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதால் அவர் சிறையிலே உள்ளார்.
இதையும் படிங்க:"அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மீதான தடை உறுதி"- டெல்லி உயர் நீதிமன்றம்!
இந்த நிலையில் தான், டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதன்படி, டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முக்கிய நபராக அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்டுள்ளார் என சிபிஐ தெரிவித்துள்ளது.