டெல்லி :மேற்கு வங்கம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மஹுவா மொய்த்ரர வீடு உள்ளிட்ட கொல்கத்தாவில் அவர் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர், முன்னாள் பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசு ஊழியர்கள் குறித்த ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக்பால் அமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா முறைகேடு வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பிலும் விசாரணை செய்ய சிபிஐக்கு நேற்று (மார்ச்.22) உத்தரவிட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ராவின் வீடு, கொல்கத்தாவில் அவர் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக லோக்பால் அமைப்பு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபரிடம் திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா பணம் பெற்றதாக பதியப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தி 6 மாதத்திற்குள் அறிக்கை அளிக்க கடந்த மார்ச் 15ஆம் தேதி சிபிஐக்கு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக சிபிஐ முதற்கட்ட விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து இன்று (மார்ச்.23) அவர் தொடர்புடைய இடங்களில் சோதனையில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமம் குறித்து கேள்வி எழுப்ப திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா துபாயை சேர்ந்த தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் பணம் பெற்றதாக பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார்.