டெல்லி:அதானி குழும முறைகேட்டில் தொடா்புடைய நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபி தலைவா் மாதபி பூரி புச், பங்கு வைத்திருப்பதாக ஹிண்டன்பா்க் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி இருந்தன.
முன்னதாக ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை விசாரித்த செபி அமைப்பே தற்போது முறைகேட்டில் சிக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததால் இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இது தொடா்பாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், "ஹிண்டன்பா்க் ஆய்வறிக்கை அதானி நிறுவனங்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை செபி அமைத்த வல்லுநா்கள் குழு நிராகரித்தது.
ஆனால், தற்போதைய குற்றச்சாட்டுகள் செபியின் பங்களிப்பைக் காட்டுகிறது. செபி மீது நம்பிக்கை வைத்து தங்களின் வருமானத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் சிறு, குறு முதலீட்டாளா்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த மாபெரும் மோசடி குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அவசியம்.
அதுவரையில், கடந்த 70 ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட தேசத்தின் அரசமைப்பு நிறுவனங்களைச் சமரசம் செய்து பிரதமா் நரேந்திர மோடி தனது நண்பரை பாதுகாப்பாா்” எனக் குறிப்பிட்டிருந்தாா். இந்நிலையில், ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற கூடுக் குழு விசாரிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை பாஜக மறுத்து உள்ளது.