பாட்னா :பீகாரில் ஜேடியு - ஆர்ஜேடி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவி வகித்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாகா ஜேடியு - ஆர்ஜேடி, காங்கிரஸ் இடையிலான கூட்டணியை முறிந்தது. இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை மாநில அளுநரிடம் கடந்த ஜனவரி 28ஆம் தேதி வழங்கிய நிதிஷ் குமார், தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து, அன்று மாலையே மீண்டும் பீகார் மாநில முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு பீகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். துணை முதலமைச்சர்களாக பாஜகவை சேர்ந்த விஜய் குமார் சின்ஹா மற்றும் சாம்ராட் சவுத்ரி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். மேலும், நிதிஷ் குமாருடன் சேர்த்து 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட நிலையில் தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். பீகார் சட்டப்பேரவையில் இன்று (பிப். 12) நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
முன்னதாக பீகார் சட்டப்பேரவை சபாநாயகரும், தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான அவாத் பிஹாரி சவுத்ரிக்கு எதிராக அவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 125 ஆதரவு வாக்குகளும், 112 எம்.எல்.ஏக்கள் தீர்மானத்தை எதிர்த்தும் வாக்களித்தனர்.