தேஜ்பூர் : அசாம் மாநிலம் ரங்கபரா பகுதியை சேர்ந்தவர் மகேந்திர ஓரங். சர்வதேச வாக்காளர்கள் கட்சி சார்பில் சோனித்பூர் மக்களவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் நேற்று (மார்ச்.27) மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் தனது ஆதரவாளர்கள் 10 பேருடன் வேட்புமனு தாக்கல் செய்ய மகேந்திர ஓரங் சென்று உள்ளார்.
சோனித்பூர் மாவட்ட நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற மகேந்திர ஓரங், வேட்புமனுத் தாக்கலுக்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளார். வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது வேட்பாளர் டெபாசிட் தொகையாக 25 ஆயிரம் செலுத்த வேண்டும் என்பது விதியாகும். ஆனால் மகேந்திர ஓரங்கிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் தேர்தல் அலுவலரை சந்தித்த மகேந்திர ஓரங் தவணை முறையில் டெபாசிட் தொகையை செலுத்துவதாகவும், வேட்புமனு பரிசீலனைக்குள் பாக்கித் தொகையை செலுத்திவிடுவதாகவும் தெரிவித்து உள்ளார். ஆனால் இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி வேட்பாளர் வேட்புமனு தாக்கலின் போதே டெபாசிட் தொகையை முழுவதுமாக செலுத்த வேண்டும் என்பது விதியாகும்.
இதை மேற்கொள் காட்டி மகேந்திர ஓரங்கின் வேட்புமனுவை பெற்றுக் கொள்ள தேர்தல் அதிகாரி மறுத்துவிட்டார். இதனால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத விரக்தியில் மகேந்திர ஓரங் வீடு திரும்பினார். கடைசி நேரத்தில் தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் தன்னால் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை என்றும், தன் நண்பரிடம் டெபாசிட் தொகை செலுத்த பணம் கோரிய நிலையில் அவர் ஆன்லைனில் பணம் அனுப்பியதாகவும் ஆனால் தனது வங்கிக் கணக்கு பணம் வந்து சேரவில்லை என்றும் மகேந்திர ஓரங் ஆதங்கத்துடன் தெரிவித்து உள்ளார்.