வயநாடு (கேரளா): கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த திங்கள்கிழமை (ஜுலை 29) நள்ளிரவு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ளனர்.
இப்பெருந்துயர் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ள நிலையில், நிலச்சரிவால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட மூன்று கிராமங்களில் தொடர்ந்து நான்காவது நாளாக இன்று மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வயநாடுக்கு உட்பட்ட படவெட்டி கன்னு என்ற பகுதியில் இந்திய ராணுவத்தினர் இன்று காலை மீட்புப் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி, கடந்த நான்கு நாட்களாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நான்கு பேரை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.
அவர்களில் இரண்டு பெண்கள், இரு ஆண்கள் அடங்குவர் என்றும் , உயிரோடு மீட்கப்பட்டுள்ள இரண்டு பெண்களில் ஒருவரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத் துறையினர், கடலோர காவல் படை உள்ளிட்ட கூட்டுக் குழுவினர், வயநாட்டில் கடந்த நான்கு நாட்களாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன என்று கேரள மாநில சட்டம் -ஒழுங்கு காவல் துறை ஏடிஜிபி எம்.ஆர். அஜித் குமார் தெரிவித்துள்ளார்.
199 பிரேத பரிசோதனைகள்:இதனிடையே, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் இதுவரை 199 பேரின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், உருக்குலைந்துள்ள 130 உடல்களை அடையாளம் காண்பதற்காக டிஎன்ஏ மாதிரிகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் தமது பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:துக்க பூமியான வயநாடு.. 300-ஐ நெருங்கும் உயிர் பலி - தற்போதைய நிலை என்ன?