ஐதராபாத்:கட்வெல் தொகுதி பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி எம்எல்ஏ பந்தல கிருஷ்ண மோகன் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார். ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் வைத்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் பந்தல கிருஷ்ண மோகன் ரெட்டி தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார்.
அவருக்கு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வரவேற்பு அளித்தார். முன்னதாக கடந்த மூன்று நாட்களுக்கு முன் தனது ஆதரவாளர்களை சந்தித்த பந்தல கிருஷ்ண மோகன் ரெட்டி ஜூலை 6ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக அறிவித்தார்.
கிருஷ்ண மோகன் ரெட்டி முதலமைச்சர் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த போது அமைச்சர்கள் பொங்குலேடி ஸ்ரீனிவாஸ் ரெட்டி, ஜூபல்லி கிருஷ்ணாராவ், முதலமைச்சரின் ஆலோசகர் வேம் நரேந்தர் ரெட்டி, எம்பி மல்லு ரவி, எம்எல்ஏக்கள் யென்னம் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, தனம் நாகேந்தர், கைரதாபாத் டிசிசி தலைவர் ரோஹின் ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கிருஷ்ண மோகன் ரெட்டி பிஆர்எஸ்-ல் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு அக்கட்சியின் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தலைவர்கள் எம்எல்ஏக்கள் விலகுவதை தடுக்க பிஆர்எஸ் தலைமை எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் சாதகமான பலன் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.