டெல்லி:கடந்த 13ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்ற ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சுவாதி மலிவால் தாக்கப்பட்டதாக பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார், மாநிலங்களவை உறுப்பினர் சுவாதி மலிவாலை தாக்கியதாக தகவல் பரவியது.
இது குறித்து சுவாதி மலிவால் புகார் தெரிவிக்காத நிலையில், போலீசார் தரப்பில் இருந்தும் மவுனம் காக்கப்பட்டு வந்தது. இதனிடையே இந்த விவகாரம் பூதாகரம் அடைந்த நிலையில், பாஜகவினர் உள்பட பல்வேறு தரப்பினர் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகக் கோரினர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சுவாதி மலிவால் டெல்லி போலீசில் புகார் அளித்தார்.
மாவட்ட மேஜிஸ்திரேட் முன்னிலையில், சுவாதி மலிவாலின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அப்போது, முதலமைச்சரின் தனி உதவியாளர் பிபவ் ராவ் தன்னை அறைந்ததாகவும், வயிற்றில் அடித்ததாகவும், எட்டி உதைத்ததாகவும் சுவாதி மலிவால் புகாரில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கோரி பிபவ் ராவுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
முன்னதாக செய்தித் தாள்களில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு சுவாமி மலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் இன்று (மே.17) பிபவ் ராவ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரி டெல்லி மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் பிபவ் ராவ், மகளிர் ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.