டெல்லி: தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உட்பட 6 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக, கடந்த 2015ஆம் ஆண்டில் மத்திய அரசு நிதி ஆயோக் அமைக்கப்பட்டது.
நாட்டின் வளர்ச்சிக்கான கொள்கைகளை வகுப்பதே இதன் முதன்மை நோக்கமாகும். நிதி ஆயோக்கின் உயர்நிலை அமைப்பான நிர்வாகக் குழுவின் 9வது கூட்டம், அதன் தலைவரான பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்த குழு, அனைத்து மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்களை உள்ளடக்கியதாகும்.
வழக்கமாக நிதி ஆயோக் கூட்டத்திற்கு முதலமைச்சர்களுக்கு பதில் மாநில அமைச்சர்கள் பங்கேற்று வந்தனர். ஆனால் இந்த கூட்டத்தில் முதலமைச்சர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உட்பட 6 மாநில முதலமைச்சர்கள் அறிவித்திருக்கின்றனர்.