ஐதராபாத் :நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று (ஏப்.26) 12 மாநிலங்கள் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகள் விவரம்:இரண்டாம் கட்ட தேர்தலை பொறுத்தவரை அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளிலும், சத்தீஸ்கரில் 3 இடங்கள், கர்நாடகாவில் 14 தொகுதிகள், கேரளாவில் 20 இடங்கள், மத்தியப் பிரதேசத்தில் 6 இடங்கள், மகாராஷ்டிராவில் 8 தொகுதிகள், அவுட்டர் மணிப்பூரிலும், ராஜஸ்தானில் 13 இடங்கள், உத்தர பிரதேசத்தில் எட்டு தொகுதிகள், மேற்கு வங்கத்தில் மூன்று இடங்கள், ஜம்மு & காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா ஒரு தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதில் இன்னர் மணிப்பூர் மக்களவைத் தொகுதியில் உள்ள 15 சட்டப் பேரவைகளுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெற்றது. அவுட்டர் மணிப்பூரில் உள்ள 13 சட்டப் பேரவைகளுக்கு இன்று 2ஆம் கட்டமாகத் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திர வேட்பாளர்களும் போட்டியிடும் தொகுதிகளும்:கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். ராகுல் காந்தி மட்டுமின்றி இந்த முறை வயநாடு தொகுதி மற்ற வேட்பாளார்களாலும் நட்சத்திர தொகுதியாக அறியப்படுகிறது. ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக கேரள மாநில தலைவர் கே.சுரேந்தரன், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா ஆகியோரும் வயநாடு தொகுதியில் இந்த முறை களம் காணுகின்றனர். மும்முனை போட்டி காரணமாக, வயநாடு இந்த முறை தேசிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளது.
அதைத்தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியிலும், அவரை எதிர்த்து பாஜக சார்பில் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்திலும் போட்டியிடுகின்றனர். பாலிவுட் நடிகை ஹேமாமாலினி மதுரா தொகுதியிலும், முன்னாள் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல், ராஜ்நந்த்கான் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.