தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

துணைவேந்தர் நியமனங்களில் யுசிஜி திருத்தம்...தமிழகத்தைத் தொடர்ந்து கர்நாடகாவும் எதிர்ப்பு! - KARNATAKA CM OPPOSES UGC AMENDMENTS

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிப்பதில் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்வதாக கர்நாடகா முதலமைச்சர் சித்தராமைய்யா குற்றம் சாட்டியுள்ளார். பாஜக அல்லாத மாநில அரசுகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமைய்யா
கர்நாடகா முதலமைச்சர் சித்தராமைய்யா (Image credits-IANS)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2025, 6:35 PM IST

பெங்களூரு:பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கு ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வரைவு திருத்தத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில் இப்போது கர்நாடகா முதலமைச்சர் சித்தராமைய்யாவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கர்நாடகா முதலமைச்சர் சித்தராமைய்யா,"மாநிலங்களிடம் உள்ள அதிகாரங்களை மத்திய அரசு பறித்துக் கொள்ளும் இந்த நகர்வுக்கு நான் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றேன். நமது கூட்டாட்சி முறையை சீரழிக்கும் நோக்கம் கொண்ட எந்த ஒரு முயற்சியையும் கர்நாடகா அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. பாஜக அல்லாத மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்த பின்னர் இது குறித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதையும் படிங்க:தமிழ்நாடு சட்டப்பேரவை 2025 கூட்டத்தொடரின் மூன்றாவது நாள்! சூடுபிடித்த அண்ணா பல்கலை., விவகாரம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அதிகாரத்துக்கு வந்ததில் இருந்து துணைவேந்தர்கள் நியமனங்களில் ஆளுநர்களின் தலையீடு அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தில் மாநில அரசின் பரிந்துரைகளை மீறி ஆளுநர்கள் செயல்படுகின்றனர். கல்வி என்பது மாநில அரசின் பட்டியலாகும். தேவையற்ற தலையீடு என்பது மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே மோதல் போக்கை ஏற்படுத்தும். துணைவேந்தர்கள் நியமனத்துக்கான தேடுதல் குழுவை அமைப்பதற்கான அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பறித்து ஆளுநருக்கு அளிக்கும் வகையில் திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது. மாநில அரசின் மீது கட்டுப்பாடு விதிப்பதை தவிர இது வேறு ஒன்றும் இல்லை.

மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்துக்கான அதிகாரத்தைப் பறிப்பதன் மூலம், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் அல்லாதவர்களுக்கு துணைவேந்தர் பதவி அளிக்கப்படும் என்ற அச்சம் இப்போது எழுந்துள்ளது. இப்போது கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நிபுணர்கள், கல்வியாளர்களை துணைவேந்தர்களாக நியமிக்கின்றோம். ஆனால், இப்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின் படி துணைவேந்தர் நியமிக்க நாடு முழுவதும் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று நியமிக்க முடியும். எனவே கர்நாடகத்தை சேர்ந்தவர்களுக்கான துணைவேந்தர் பதவியில் , இனி வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை நியமிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இந்த வழியில் கர்நாடகா மாநிலத்தவர்களை மத்திய அரசு ஏமாற்ற முயற்சிக்கிறது,"என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details