தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சர்ச்சை கருத்து: இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா ராஜினாமா! - Sam Pitroda resign - SAM PITRODA RESIGN

சர்ச்சை கருத்து வெளியிட்ட விவகாரத்தில் இந்திய ஓவர்சீஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சாம் பிட்ரோரா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Etv Bharat
Indian Overseas Congress Chairman Sam Pitroda (Photo Credit IANS)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 7:27 PM IST

டெல்லி: இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் தொழிலதிபர் சாம் பிட்ரோடா, தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், உலகின் ஜனநாயகத்துக்கு இந்தியா ஓர் சிறந்த உதாரணம் என்றும் நாட்டின் கிழக்கில் உள்ள மக்கள் சீனர்களை போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களை போலவும், வடக்கில் உள்ள மக்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இப்படி பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை நம்மால் ஒற்றுமையாக வைத்திருக்க முடியும் என்று அவர் கூறினார். மேலும், கடந்த 75 ஆண்டுகளில் நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியான சுற்றுச்சுழலில் வாழ்ந்து வருவதாகவும் அவ்வப்போது சிறு சண்டைகள் ஆங்காங்கே நிகழ்ந்தாலும் மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைமுறை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவிய நிலையில், நாட்டில் நிறவெறியை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்து வருவதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பிரதமர் மோடி, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பஸ்வ சர்மா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் காங்கிராஸ் அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக சாம் பிட்ரோடா தெரிவித்து உள்ளார். அயலக காங்கிரஸ் பிரிவின் தலைவர் பொறுப்பை விட்டு விலகுவது குறித்து காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், சாம் பிட்ரோடாவின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "சாம் பிட்ரோடா இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தனது சொந்த விருப்பத்தின் பேரில் விலக முடிவு செய்துள்ளார். அவரது முடிவை காங்கிரஸ் தலைவர் ஏற்றுக் கொண்டார்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக அமெரிக்காவில் பரம்பரை வரி முறை கடைபிடிக்கப்படுவதாகவும் அதன்படி 100 சதவீதம் சொத்து சேர்க்கும் செல்வந்தர் தனது மறைவுக்கு பின்னர் அதில் 45 சதவீதத்தை மட்டுமே தனது சந்ததியினருக்கு வழங்க முடியும் என்றும் மீதத் தொகையை அரசு எடுத்துக் கொள்ளும் என்றார். மேலும் இந்த சட்டம் இந்தியாவில் நடைமுறையில்லை என்று குறிப்பிட்டார். இந்த கருத்து சர்ச்சையை கிளப்பிய நிலையில், பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையும் படிங்கள்:"தோல் நிறத்தின் அடிப்படையில் அவமரியாதை செய்வதா.. பொறுத்துக் கொள்ள முடியாது" - சாம் பிட்ரோடா கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம்! - Sam Pitroda Racist Remarks

ABOUT THE AUTHOR

...view details