தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'இப்போ 22 வயசு.. இனிமேலும் தள்ளி போட முடியாது'.. ஐதராபாத் வீணா-வாணி பெற்றோர் வேதனை..! - TELANGANA VEENA VANI TWINS

தெலுங்கானாவில் ஒட்டி பிறந்த இரட்டை பெண் பிள்ளைகளின் அறுவை சிகிச்சைக்காக பெற்றோர் கடந்த 22 வருடங்களாக போராடி வருகின்றனர். சிகிச்சை தள்ளி போவதால் மகள்களின் நிலை மோசமாக வாய்ப்புள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இரட்டை மகள்களுடன் பெற்றோர்
இரட்டை மகள்களுடன் பெற்றோர் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2024, 1:46 PM IST

மஹபூபாபாத்: தெலுங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டம் தண்டலப்பள்ளியின் பிரிஷெட்டிகுடம் பகுதியை சேர்ந்தவர்கள் மரகனி முரளி மற்றும் நாகலட்சுமி தம்பதி. இவர்களுக்கு நான்கு மகள்கள். இதில், இரண்டாவது மற்றும் மூன்றாவது மகள்களான வீணா - வாணி இருவரும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள். கடந்த 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பிறந்த இருவரும், இரு தினங்களுக்கு முன்புதான் பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். தற்போது இவர்களுக்கு 22 வயதாகிறது.

கடந்த 22 வருடங்களாக இந்த இரு மகள்களையும் முரளி - நாகலட்சுமி தம்பதி மிகுந்த வலியோடு பராமரித்து வருகின்றனர். அறுவை சிகிச்சை செய்து எப்படியாவது இருவரையும் உயிருக்கு ஆபத்தின்றி பிரித்துவிட பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து அரசிடமும், மருத்துவர்களிடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த பயனுமில்லை. வீணா - வாணி பிறந்தது முதல் 13 வயது வரை, ஹைதராபாத்தில் உள்ள நிலூஃபர் மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு, பின்னர் ஷிஷு விஹாரில் உள்ள குழந்தைகளுக்கான மாநில இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உயிருக்கே ஆபத்து:மகள்களை பிரிக்க வேண்டுமானால் அறுவை சிகிச்சை மட்டும்தான் ஒரே வழி என்று நம்பி இருக்கும் தம்பதியினர், மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு இரட்டை மகள்களுக்கு பல கட்ட சோதனைகள் எடுக்கப்பட்டது. சுமார் மூன்று மாதங்களாக சிகிச்சைக்கான சோதனைகளை எடுத்து வந்த மருத்துவர்கள் கடைசியாக இரட்டையர்களை பிரிப்பது அவர்களது உயிருக்கு ஆபத்தானது என தெரிவித்து சிகிச்சையை கைவிட்டனர்.

இதையும் படிங்க:"சல்மான்கான் ரூ.5 கோடி தராவிட்டால்..." -வாட்ஸ் ஆப்பில் வந்த மிரட்டல் குறித்து போலீஸ் விசாரணை

காத்திருப்பு பலனளிக்குமா?:முயற்சியை கைவிடாத தம்பதி பல ஆண்டுகளாக, உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு மருத்துவர்களின் உதவியை நாடியுள்ளனர். அந்த வகையில், இரட்டையர்களைப் பிரிக்கத் நுட்பமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சை செய்வதில் மருத்துவர்கள் ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிகிறது. ஆனால், உயர்மட்ட சிகிச்சைக்கு பெரும் தொகை தேவை என்பதால் அரசிடம் இருந்தும், தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் நிதியை பெற போராடி வருகின்றனர். தெலுங்கானாவில் கடந்த முதலமைச்சர்களிடம் பலமுறை முறையிட்டும் எதிர்பார்த்த பலன் இவர்களுக்கு கிடைக்கவில்லை.

இதனால், மிகவும் வேதனையடைந்துள்ள முரளி - நாகலட்சுமி தம்பதியினர், '' அறுவை சிகிச்சை தாமதமாகிக்கொண்டே செல்வதால், தங்களது மகள்களின் வாழ்க்கை மிகவும் கடினமாகிறது. பிள்ளைகளை விட்டு செல்ல முடியாமலும், அன்றாடப் போராட்டங்களைச் சகிக்க முடியாமலும் மிகவும் கஷ்டப்படுகிறோம்'' என்று உதவிக்காக கெஞ்சும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தொடரும் நம்பிக்கை:இத்தனை போராட்டங்களுக்கு மத்தியில், கவலையை வெளிப்படுத்தாத வீணா வாணி இருவரும், அவர்களது படிப்பில் கவனம் செலுத்தி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், இரட்டையர்கள் இருவரும் விஹாரில் உள்ள இன்ஸ்டிடியூட்டில் சிஏ இறுதி ஆண்டு படித்து வருகின்றனர். பிறப்பில் இருந்தே தலை ஒட்டி வாழ்ந்து வரும் இவர்கள் கற்பனை கூட செய்யமுடியாத உடல் ரீதியான துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். அத்தனை சவால்களை எதிர்கொண்டாலும் கல்வியில் வெற்றி அடைவதில் இருவருமே உறுதியாக இருக்கின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details