ஹைதராபாத்:பணமோசடி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவதாகவும், மும்பை போலீசார் என்று கூறியும் ஹைதராபாத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற முதியவரிடம் ரூ.1.38 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட முதியவர் கொடுத்த புகாரின் பேரில் இது குறித்து சைபர்பாத் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஹைதராபாத் கேபிஎச்பி பகுதியில் வசித்து வரும் முதியவரின் மொபைல் எண்ணுக்கு கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அழைத்தவர் மும்பை போலீசார் என்று கூறியிருக்கிறார். பணமோசடி தொடர்பாக முதியவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் , இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் பேசுவதற்கு தொடர்பு கொள்ள வேண்டி ஒரு தொடர்பு எண்ணையும் கொடுத்திருக்கிறார். இதையடுத்து அந்த முதியவர் அந்த எண்ணுக்கு அழைத்துள்ளார். மறுமுனையில் பேசிய நபர் தாம் ஒரு சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி என்று அறிமுகம் செய்துள்ளார்.
இதன் பின்னர் மோசடியாளர்கள் முதியவரின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து வீடியோ காலிலும் முதியவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மறுமுனையில் போலீஸ் உடையில் இருந்த நபர் முதியவர் பெயரில் அமலாக்கத்துறை தரப்பில் விடுக்கப்பட்ட போலியான ஒரு கைது வாரண்ட்டை காட்டியிருக்கிறார். விசாரணைக்கு தேவைப்படுவதாக கூறி முதியவரின் வங்கி கணக்கு விவரங்களையும் அவர்கள் கேட்டு வாங்கினர். பயந்து போன முதியவர் அவர்கள் கேட்ட விவரங்களைக் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க:ரூ.1.70 கோடி முதலீடு செய்த ஐடி ஊழியர்.. மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது!
துணை காவல்துறை ஆணையர் என்று கூறிக்கொண்ட அந்த நபர், முதியவரிடம் குறிப்பிட்ட கட்டணத்தை அனுப்ப வேண்டும் என்றும் அது அவரது கணக்குதானா என்பதை சரிபார்ப்பதற்கான கட்டணம் என்றும் அந்த தொகையை 15 நிமிடங்களுக்குள் திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூறியிருக்கிறார். அதனை ஏற்று அந்த முதியவர் ஆரம்பத்தில் ரூ.70 லட்சத்தை மோசடியாளர்களுக்கு அனுப்பியுள்ளார். ஆனால், பணம் திரும்ப வரவில்லை. செப்டம்பர் 18ஆம் தேதிக்கும் 26ஆம் தேதிக்கும் இடையே மோசடியாளர்கள் கேட்டபடி மொத்தம் ரூ.1.38 கோடியை முதியவர் அனுப்பியுள்ளார்.
இதற்காக முதியவர் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பணம் கடனாக பெற்றுள்ளார். அப்போது அவர்கள் எதற்காக இவ்வளவு பணம் கேட்கிறீர்கள் என்று கேட்டபோதுதான் மும்பையில் இருந்து வந்த அழைப்பு குறித்தும் அவர்களுக்கு பணம் கொடுத்தது குறித்தும் கூறியிருக்கிறார்.
இதன் பின்னர்தான் இந்த சம்பவம் ஒரு மோசடியாக இருக்கலாம் என்று முதியவரின் உறவினர்கள் கருதினர். இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இது தொடர்பாக திங்களன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆன்லைன் வழியே நடைபெறும் மோசடி குறித்து எச்சரியாக இருக்கும்படியும், வங்கி, ஆதார் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் , முறையாக சரிபார்க்காமல் பணம் உள்ளிட்டவற்றை பரிமாற்றம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளளனர். சந்தேகப்படும்படி மோசடி அழைப்புகள் வந்தால் போலீசாரிடம் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.