சென்னை:ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த நிர்வாகியும், 10 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான சுக்னானா குமாரி தேவ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 89. அவரது மறைவிற்கு ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ், முதலமைச்சர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
அரசியல் பயணம்:சென்னையை பூர்விகமாக கொண்ட சுக்னானா குமாரி, சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்து இருக்கிறார். பின்னர் கல்லிக்கோட்டின் முன்னாள் அரச வாரிசான பூர்ண சந்திர மர்தராஜ் தியோ என்பவரை மணந்தார். இதனையடுத்து 1960 ஆம் ஆண்டு தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 1961ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கல்லிகோட் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளில் சார்பாக 7 முறை அதே தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் கல்லிகோட் தொகுதியானது 2009ஆம் ஆண்டு தனித் தொகுதியாக மாற்றப்பட்டது. இதனையடுத்து கபிசூரியநகர் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்ட சுக்னானா குமாரி இரண்டிலும் வெற்றி பெற்றார்.
இவர் கடைசியாக 2014ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய 54 ஆண்டு கால அரசியல் வாழ்கையில் 10 முறை எம்.எல்.ஏ, தற்காலிக சபாநாயகர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து உள்ளார். மேலும், பலமுறை அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருந்தும் அதை முற்றிலும் இவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இவரது மறைவு ஒடிசா அரசியல் வட்டாரத்தில் பொரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:மக்களவையில் அயோத்தி ராமர் கோயில் மீதான விவாதம்; திமுக எம்பிக்கள் அமளி!